அரக்கோணத்தில் சுடுகாட்டில் சமூக விரோத செயல்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
அரக்கோணத்தில் சுடுகாட்டில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம்,
அரக்கோணம், நேருஜி நகரில் மக்கள் வசிக்கும் பகுதியின் மையப்பகுதியில் சுடுகாடு உள்ளது. இங்கு பிணங்களை எரிப்பதால் சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அரக்கோணம் நகரில் எரிவாயு தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேருஜி நகர் சுடுகாடு அருகே ரூ.65 லட்சம் மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. தற்போது பிணங்கள் அனைத்தும் எரிவாயு தகன மேடையில் எரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6–ந் தேதியில் இருந்து வருகிற 15–ந் தேதி வரை எரிவாயு தகன மேடையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் மூடப்பட்டு உள்ளது.
தற்போது பிணங்கள் எல்லால் எரிவாயு தகன மேடை எதிரே உள்ள சுடுகாட்டில் எரித்தும், சம்பிராதயங்களின்படி புதைத்தும் வருகின்றனர். பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் அந்த பகுதியில் அதிக அளவில் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. முட்புதர்கள் வளர்ந்து உள்ளதால் சமூக விரோதிகள் அந்த பகுதியில் உள்ள கல்லறையில் அமர்ந்து மது அருந்துவது, சூதாடுவது, ஆடு புலியாட்டம் மற்றும் இரவு நேரங்களில் மது விற்பனை செய்வது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை கல்லறை மேல் போட்டு உடைத்து விட்டு இரவு முழுவதும் கல்லறையில் மேல் படுத்து தூங்கி விடுகின்றனர். சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடப்பதால் பிணத்தை புதைக்க கொண்டு செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். போதையில் இருக்கும் சமூக விரோத கும்பலை சேர்ந்தவர்கள் பிரச்சினை செய்து விடுவார்களோ என்று அறக்க, பறக்க பிணத்தை புதைத்துவிட்டு சென்று விடுகின்றனர்.
மேலும் சுடுகாட்டை சுற்றி குடியிருக்கும் பொதுமக்களுக்கும் சமூக விரோத கும்பலால் இடையூறு ஏற்பட்டு வருவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் சுடுகாட்டில் வளர்ந்துள்ள மரம், செடி, கொடி, முட்புதர்களை 3 மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.