கிருஷ்ணகிரியில் தனியார் தங்கும் விடுதி மேலாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் போலி நிருபர் உள்பட 5 பேர் கைது


கிருஷ்ணகிரியில் தனியார் தங்கும் விடுதி மேலாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் போலி நிருபர் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2018 11:00 PM GMT (Updated: 10 Dec 2018 4:22 PM GMT)

கிருஷ்ணகிரியில் தனியார் தங்கும் விடுதி மேலாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியின் மேலாளராக முருகேசன் (வயது 30) என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த விடுதிக்கு 5 பேர் வந்தனர். அவர்கள் விடுதியின் மேலாளர் முருகேசனிடம், தங்களை போலீஸ், பத்திரிகையாளர்கள் என்றும், விடுதி பற்றி தங்களுக்கு புகார் வந்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

அவர்கள் மீது சந்தேகம் அடைந்த முருகேசன் இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் கிருஷ்ணகிரி அடுத்த வெல்லக்குட்டையை சேர்ந்த பார்த்திபன் என்கிற மின்னல் பார்த்திபன் (28), பாப்பாரப்பட்டி கார்த்திக் (29), கிருஷ்ணகிரி மோகன்ராவ் காலனி குணா என்கிற குணசேகர் (27), தினேஷ்குமார் என்கிற முத்து (25), போதிநாயனப்பள்ளி மூர்த்தி (40) என்பதும், நிருபர், போலீஸ் எனக்கூறி விடுதி மேலாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story