உத்தமபாளையத்தில்: பன்றி காய்ச்சலுக்கு டீக்கடைக்காரர் பலி


உத்தமபாளையத்தில்: பன்றி காய்ச்சலுக்கு டீக்கடைக்காரர் பலி
x
தினத்தந்தி 11 Dec 2018 3:30 AM IST (Updated: 10 Dec 2018 10:14 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் பன்றி காய்ச்சலுக்கு டீக்கடைக்காரர் பலியானார்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் இங்குள்ள பி.டி.ஆர். காலனி, தண்ணீர் தொட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

தேனி மெயின்பஜார் வீதியில் டீக்கடை நடத்திவந்தவர் மாதவன் (வயது 52). கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவர் காய்ச்சல் பாதிப்பால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மாதவன் பரிதாபமாக இறந்தார். நேற்று அவரது உடல் சொந்த ஊரான உத்தமபாளையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

மாதவன் இறந்ததை தொடர்ந்து உத்தமபாளையம் பேரூராட்சி சார்பில் மெயின்பஜார் வீதி மற்றும் முக்கிய இடங்களில் தொழிலாளர்கள் துப்புரவு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story