மாவட்டம் முழுவதும்: 233 கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம்


மாவட்டம் முழுவதும்: 233 கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 11 Dec 2018 3:15 AM IST (Updated: 10 Dec 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் 233 கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல், 

தமிழகத்தில் வருவாய்த்துறை சார்பில் பெரும்பாலான சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி, இணையதள சேவை வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ஆனால், மடிக்கணினியில் புதிய மென்பொருளை பதிவேற்றாதது, இணையதள சேவை குறைபாடு ஆகியவற்றால் சிரமம் ஏற்படுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நிலத்துக்கான அடங்கல் சான்றையும், ஆன்லைன் மூலம் வழங்கும் முறையை அரசு கொண்டு வந்தது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். 30 நிமிடங்களில் வழங்க வேண்டிய அடங்கல் சான்றை பெறுவதற்கு விவசாயிகள் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டினர்.

எனவே, ஆன்லைனில் அடங்கல் சான்று வழங்கும் முறையை கைவிட வேண்டும், அதிவேக இணையதள சேவையுடன் மடிக்கணினி வழங்க வேண்டும், அடிப்படை வசதிகளுடன் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்தினர். எனினும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இதையடுத்து நேற்று முதல் மாநிலம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் வேலைநிறுத்த போராட்டம் குறித்து அந்தந்த தாலுகா அலுவலக வளாகம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு, மேற்கு தாலுகா, பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கொடைக்கானல், நத்தம், ஆத்தூர், வேடசந்தூர் ஆகிய 9 தாலுகாக்களிலும் 233 கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்தந்த தாலுகா அலுவலக வளாகம், பொதுமக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களை சந்தித்து போராட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

வேடசந்தூர் தாலுகாவில் வடமதுரை, வேடசந்தூர், எரியோடு, அய்யலூர், கோவிலூர், கோட்டாநத்தம், பாளையம் ஆகிய 7 பிர்க்காவில் பணியாற்றும் 37 கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி குஜிலியம்பாறையில் பொதுமக்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் லோகநாதன் கூறுகையில், மாவட்டம் முழுவதும் உள்ள 233 கிராம நிர்வாக அலுவலர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான காரணங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும், என்றார். 

Next Story