விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு: 2 மகன்களுடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு: 2 மகன்களுடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Dec 2018 4:00 AM IST (Updated: 10 Dec 2018 11:27 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 2 மகன்களுடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி தாலுகா கொங்கராயப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராமகிருஷ்ணன் (வயது 38). இவர் நேற்று காலை தனது மகன்கள் பெரியமருது (8), அரவிந்தன் (6) மற்றும் உறவினர் அஞ்சலை (35) ஆகியோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த ராமகிருஷ்ணன், தான் கொண்டு வந்திருந்த கேனை திறந்து அதில் இருந்த மண்எண்ணெயை தனது மகன்கள், உறவினர் அஞ்சலை ஆகியோர் மீது ஊற்றிவிட்டு பின்னர் தன் மீதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து, அவர்கள் 4 பேரையும் தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கிக்கொண்டு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் ராமகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கும் தியாகதுருகம் அடுத்த உதயமாம்பட்டை சேர்ந்த லட்சுமி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு 2 மகன்கள் உள்ளனர். நான் வெளிநாட்டில் வேலை செய்து வந்தேன். இந்நிலையில் கடந்த மாதம் 7-ந் தேதி எனது மனைவி லட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் தெரியாமல் நாங்கள் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில் போலீசார், தற்கொலை என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன் பின்னர் எனது மனைவியின் சாவில் சந்தேகம் இருப்பதை அறிந்து நாங்கள் விசாரித்தோம். அப்போது எனது மனைவிக்கும் உதயமாம்பட்டை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரிந்தது.

மேலும் இதுபற்றி விசாரித்ததில் அந்த நபர், எனது மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை அவருக்கு தெரியாமல் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை காண்பித்து ரூ.5 லட்சம் மற்றும் 15 பவுன் நகைகளை பறித்துள்ளார். கடந்த மாதம் 6-ந் தேதியன்று இரவு மீண்டும் எனது மனைவியிடம் பணம் கேட்டு அந்த நபர் மிரட்டியுள்ளார். அதற்கு பணம் கொடுக்க லட்சுமி மறுத்ததால், செல்போனில் இருந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார். இதனால் எனது மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றி மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை பற்றி எடுத்துக்கூறி புகார் மனு கொடுத்தோம். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பதில் கூறி எங்களை திருப்பி அனுப்பி விட்டனர். எனது மனைவியின் சாவுக்கு காரணமானவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரித்து எனது மனைவி சாவுக்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். மேலும் இதுபோன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 2 மகன்கள், உறவினருடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story