விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்: கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்


விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்: கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2018 10:00 PM GMT (Updated: 2018-12-10T23:27:49+05:30)

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர்.

இவர்கள் அனைவரும் திடீரென கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சங்க நிறுவனர் ராஜமாணிக்கம், மாநில தலைவர் சுரேஷ், மாவட்ட தலைவர் வள்ளல்பாரி, செயலாளர் பாக்யராஜ், பொருளாளர் சக்திவேல், துணைத்தலைவர் ராஜா, இணை செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இவர்களை அழைத்து கோட்டாட்சியர் குமாரவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், வானூர் தாலுகா எறையூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த மேகநாதனுக்கு முறையற்ற பணி மாறுதல் வழங்கப்பட்டதாகவும், இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகும் இந்த பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இதனால் அவர் கடந்த 3 மாதங்களாக ஊதியமின்றி சிரமப்படுவதாகவும் எனவே அவருக்கு காலியாக உள்ள கிராமத்தில் பணி நியமனம் வழங்க வேண்டும். மேலும் எங்கள் சங்கத்திற்கு எதிராக செயல்படும் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முறையிட்டனர்.

இதை கேட்டறிந்த கோட்டாட்சியர், நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை வாபஸ் பெற்று வரும்படியும், அவ்வாறு வாபஸ் பெற்று வந்த பிறகு பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்வதாக கூறினார். அதனை ஏற்க மறுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் தற்போதே உடனடியாக பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யும்படியும், அவ்வாறு செய்த பிறகு தாங்கள் கோர்ட்டில் உள்ள வழக்கை வாபஸ் பெற்று வருகிறோம் என்றனர். அதற்கு கோட்டாட்சியர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மீண்டும் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோட்டாட்சியரை கண்டித்து கோஷம் எழுப்பியபடி அவரை முற்றுகையிடுவதற்காக அவரது அறைக்குள் கிராம நிர்வாக அலுவலர்கள் செல்ல முயன்றனர்.

இதையறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பிறகு மீண்டும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், ஏற்கனவே முன்பிருந்த கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மேகநாதனுக்கு நெமிலி கிராமத்தில் பணி செய்யுமாறு உத்தரவு போட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை ஏற்று நெமிலி கிராமத்தில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இதற்கு கோட்டாட்சியர் குமாரவேல் ஒப்புக்கொண்டார். மேலும் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரை இடமாற்றம் செய்வது குறித்து கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story