தனியார்மயமாக்கலை கண்டித்து: விமான நிலைய ஊழியர்கள் 28-ந் தேதி ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் - கோவையில் சேவை பாதிக்கும் அபாயம்


தனியார்மயமாக்கலை கண்டித்து: விமான நிலைய ஊழியர்கள் 28-ந் தேதி ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் - கோவையில் சேவை பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 11 Dec 2018 3:30 AM IST (Updated: 11 Dec 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மயமாக்கலை கண்டித்து கோவை விமான நிலைய ஊழியர்கள் வருகிற 28-ந் தேதி ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் கோவையில் விமான சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை,

கவுகாத்தி, லக்னோ, ஜெய்ப்பூர், ஆமதாபாத், மங்களூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமானநிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. அதை கண்டித்து கோவை விமான நிலைய வளாகத்தில் ஊழியர்கள் சங்கம் சார்பில் நாளை(புதன்கிழமை) வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அடுத்த கட்டமாக வருகிற 28-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஒட்டுமொத்த விடுப்பு எடுக்கும் போராட்டம் நடக்கிறது.

இதுகுறித்து இந்திய விமான நிலைய ஊழியர்கள் சங்க கோவை கிளை தலைவர் குமார் கூறியதாவது:-

மத்திய அரசு 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை படிப்படியாக மற்ற விமான நிலையங்களிலும் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கு தனியார் நிலங்கள் அரசு பணத்தில் வாங்கப்படுகின்றன. சில விமான நிலையங்கள் தனியார் நிறுவனங்களுக்கு 50 ஆண்டு குத்தகை அடிப்படையில் விடப்படுகிறது. அரசு பணத்தில் வாங்கி விரிவாக்கம் செய்யப்படும் விமான நிலையங்கள் தனியார் கைகளில் தான் செல்கிறது. இது ஒரு மோசமான செயல்.

எனவே மத்திய அரசின் தனியார் மயமாக்கல் செயலை கண்டித்து கோவை விமான நிலையத்தில் நாளை(புதன்கிழமை) வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் விமான சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது. தற்போது நாங்கள் நடத்தும் போராட்டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லையென்றால் அடுத்த கட்டமாக கோவை விமான நிலையத்தில் வருகிற 28-ந் தேதி ஒட்டு மொத்த விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்தப்படும். அப்போது விமான நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு பிரிவு ஊழியர்கள், சுகாதாரப்பிரிவு ஊழியர்கள், ஆம்புலன்சு பிரிவு ஊழியர்கள் உள்பட அதிகாரிகள் அல்லாத அனைத்து ஊழியர்கள் 110 பேர் இதில் பங்கு கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை விமான நிலைய ஊழியர்களின் இந்த போராட்டத்தினால் அன்று ஒருநாள் கோவையில் விமான சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விமானங்கள் தரை இறங்கும் போதும், விமானங்கள் புறப்பட்டு செல்லும்போதும் விமான நிலைய ஓடு தளத்தில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் தயாராக நிற்க வேண்டும். பாதுகாப்பு கருதி அந்த வாகனங்கள் வந்து நின்ற பின்னர் தான் விமானங்கள் தரையிறங்கவும், புறப்பட்டு செல்லவும் அனுமதி அளிக்கப்படும்.

ஆனால் வருகிற 28-ந் தேதி நடக்கும் ஒட்டு மொத்த விடுப்பு போராட்டத்தினால் விமான நிலைய தீயணைப்பு வாகனம் விமான ஓடு தளத்துக்கு கொண்டு வரப்பட மாட்டாது. அவற்றை இயக்குவதற்கு ஊழியர்கள் வர மாட்டார்கள். இதனால் கோவை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதும், புறப்பட்டு செல்வதும் தடைபடும். இதை சமாளிக்க கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தள தீயணைப்பு வீரர்கள் அன்று ஒரு நாள் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சூலூரில் விமானங்கள் தரையிறங்கும் போதும், புறப்பட்டு செல்லும்போதும் விமானப்படை தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களை ஓடு தளத்துக்கு கொண்டு வந்து விமானங்கள் புறப்பட்டு செல்வதற்கும், தரையிறங்குவதற்கும் உதவி செய்வார்கள். எனவே அன்று ஒரு நாள் சூலூர் விமானப்படை வீரர்கள் கோவை விமான நிலையத்தில் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story