பா.ஜனதா பிரமுகரை கொல்ல முயன்ற பெண் உள்பட 5 பேர் கைது


பா.ஜனதா பிரமுகரை கொல்ல முயன்ற பெண் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2018 4:30 AM IST (Updated: 11 Dec 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா பிரமுகரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடவள்ளி,

கோவை கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் சாமி என்கிற உதயகுமார் (வயது 45). இவர் கோவை வேலாண்டிபாளையம் மண்டல பா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கல்வீரம்பாளையத்தில் பிளாஸ்டிக்கடை வைத்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் உதயகுமார் தனது நண்பர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் உதயகுமாரை தாக்கினார்கள். பின்னர் அரிவாளால் உதயகுமாரின் தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார்கள்.

இதனை தடுக்க வந்த அவரது நண்பர்கள் வினோத், செந்தில் ஆகியோரும் தாக்கப்பட்டனர். ரத்தம் சொட்ட, சொட்ட உதயகுமார் ஓடினார். அவரை விரட்டி சென்று மர்ம ஆசாமிகள் அரிவாளால் மீண்டும் வெட்டினார்கள். மேலும், உதயகுமாருக்கு சொந்தமான கார் மற்றும் கடையை அவர்கள் அடித்து நொறுக்கினார்கள். இதில் கார் மற்றும் கடை சேதம் அடைந்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

மர்ம ஆசாமிகள் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த உதயகுமார் வடவள்ளியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் படுகாயம் அடைந்த அவரது நண்பர்கள் வடவள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா, உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி பெண் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-

1. சங்கீதா (30), கல்வீரம்பாளையம், 2. சிவபாலன் (21), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர். 3. சன்னாசி (21), சிவகாசி, 4. மகா ராமச்சந்திரன் (23), கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர். 5. மகேஸ்வரன் (24) மருதமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சுரேந்திரன், அம்சராஜ் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கல்வீரம்பாளையத்தில் வசித்து வரும் சங்கீதாவுக்கும், அவரது கணவர் சிவக்குமாருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அப்போது உதயகுமார் அவர்களிடம் அறிமுகம் ஆகி உள்ளார். இதனைதொடர்ந்து சங்கீதாவுக்கும், உதயகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சங்கீதா தனக்கு சொந்தமான இடத்தில் உதயகுமார் கடை வைக்க அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி உதயகுமாரும் அங்கு கடை நடத்தி வருகிறார்.

சங்கீதா சில வாலிபர்களுடன் நெருங்கி பழகியதாக தெரிகிறது. அவரது வீட்டுக்கு வாலிபர்கள் அடிக்கடி வந்துள்ளனர். இதுகுறித்து உதயகுமார் சங்கீதாவிடம் கேட்டுள்ளார். உதயகுமாரின் வீடும் அருகில் இருப்பதால் சங்கீதாவின் வீட்டுக்கு வாலிபர்கள் வருவது இடையூறாக இருப்பதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கீதா, தன்னுடைய கட்டிடத்தில் இருந்து உதயகுமார் கடையை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்கள் இருவருக்கும் தகராறு இருந்து வந்தது. கடையை காலி செய்ய மறுத்து உதயகுமார் கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்து இருந்ததாக தெரிகிறது. எனவே உதயகுமார் மீது சங்கீதா அதிருப்தி அடைந்தார். தன்னுடைய கூட்டாளிகளான அம்சராஜ் உள்பட சில வாலிபர்களை தூண்டிவிட்டு உதயகுமாரை கொல்ல முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கைதானவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள், கொலை முயற்சிக்காக கல்வீரம்பாளையம் பகுதிக்கு வர பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 5 பேர் மீதும் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள அம்சராஜ், சுரேந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பா.ஜனதா பிரமுகரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story