மசினகுடி-தெப்பக்காடு சாலையில்: மரத்தை சாய்த்த காட்டுயானைகள் - போக்குவரத்து பாதிப்பு
மசினகுடி-தெப்பக்காடு சாலையில் காட்டுயானைகள் மரத்தை சாய்த்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ளது முதுமலை புலிகள் காப்பகம். இங்குள்ள வனப்பகுதி தொடர் மழை காரணமாக பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால் ஏராளமான காட்டுயானைகள் முதுமலைக்கு இடம் பெயர்ந்து வந்துள்ளன. இந்த காட்டுயானைகள் அவ்வப்போது சாலையோரங்களிலும் வந்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை மசினகுடி-தெப்பக்காடு சாலையில் காட்டுயானைகள் உலா வந்தன. அப்போது சாலையோரத்தில் இருந்த தேக்கு மரத்தை வேரோடு சாய்த்தன. தொடர்ந்து சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தின் பட்டைகளை உரித்து தின்றன. பின்னர் அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டன.
இதையடுத்து காலை 6 மணிக்கு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் மரம் விழுந்து கிடப்பது குறித்து மசினகுடி போலீசார், வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். மசினகுடி சோதனைச்சாவடி அருகே தெப்பக்காடு சாலையில் விழுந்து கிடந்த மரத்தால், அந்த வழியே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story