குன்னூர் நகராட்சி கமிஷனர் இடமாற்றம்: துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


குன்னூர் நகராட்சி கமிஷனர் இடமாற்றம்: துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2018 3:30 AM IST (Updated: 11 Dec 2018 5:52 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் நகராட்சி கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குன்னூர்,

குன்னூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் 30 வார்டுகள் உள்ளன. இங்கு நகராட்சி கமிஷனராக சரஸ்வதி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதங்களாக நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் விதிமுறைகளை மீறியும், அனுமதி இன்றியும் கட்டப்பட்ட கட்டிங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வந்தார். குறிப்பாக பஸ் நிலைய பகுதியில் நகராட்சிக்கு குத்தகை தொகையை முறையாக செலுத்தாத விடுதிக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் மவுண்ட்பிளசென்ட் பகுதியில் முன்னாள் கவுன்சிலர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதற்கிடையில் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி, வேலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இது அனைத்து தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை குன்னூர் நகராட்சி அலுவலகத்துக்கு வந்த துப்புரவு தொழிலாளர்கள் கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பணிகளை புறக்கணித்தனர். மேலும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து துப்புரவு தொழிலாளர்கள் கூறியதாவது:-

கமிஷனர் சரஸ்வதி, நகராட்சிக்கு வருவாய் பெருக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். எங்களுக்கு நிலுவையில் இருந்த பணப்பலன்களை 5 மாதங்களில் பெற்று தந்தார். நேர்மையாக பணியாற்றிய அவரை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவது, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story