ஒரே நேரத்தில் 3 திட்டப்பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலில் திணறும் ஈரோடு மாநகரம்


ஒரே நேரத்தில் 3 திட்டப்பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலில் திணறும் ஈரோடு மாநகரம்
x
தினத்தந்தி 11 Dec 2018 5:00 AM IST (Updated: 11 Dec 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

ஒரே நேரத்தில் 3 திட்டப்பணிகள் நடைபெறுவதால் ஈரோடு மாநகரம் போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய சாலைகளில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. மேலும், புதை மின்கேபிள் பதிக்கும் பணிகளும், ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கும் பணியும் தொடங்கி நடந்து வருகிறது. ஒரே நேரத்தில் 3 திட்டப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் ஈரோடு நாச்சியப்பா வீதியிலும் நடந்து வந்தது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டு மின்கேபிளும், குடிநீர் குழாய்களும் பதிக்கப்பட்டன. அதன்பின்னர் குழிகளை மூடியதால் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அந்த வழியாகவே மீண்டும் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வந்தன.

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர், கோவை, பழனி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் அந்த வழியாக சென்றன. இதனால் நாச்சியப்பா வீதி முழுவதும் புகை மண்டலமாக மாறியதை தொடர்ந்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதிய தார் சாலை அமைக்கும் வரை நாச்சியப்பா வீதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன்பின்னர் அனைத்து பஸ்களும் ஈரோடு மேட்டூர் ரோடு வழியாக மாற்றி விடப்பட்டன.

ஏற்கனவே ஈரோடு மேட்டூர்ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது அனைத்து பஸ்களும் அந்த வழியாக இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கூட, கல்லூரி வாகனங்கள் அதிகமாக வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதேபோல் நேற்று மாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுவஸ்திக் கார்னரில் இருந்து அரசு ஆஸ்பத்திரி மேம்பாலம் வரை வாகனங்கள் வரிசையாக நின்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தாலும், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

மேட்டூர் ரோட்டில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக சத்தி ரோடு, பிரப் ரோடு, பெருந்துறை ரோட்டிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், திருப்பூர், கோவை, ஊட்டியில் இருந்து வரும் பஸ்கள், லாரிகள் மேம்பாலம் கட்டும் பணி காரணமாக சம்பத்நகர் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களும் நசியனூர் ரோடு வழியாக மேட்டூர் ரோட்டிற்கு வந்ததால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

ஈரோடு நாச்சியப்பா வீதியில் பாதாள சாக்கடை அமைத்தல், புதை மின்கேபிள் அமைத்தல், ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய பணிகள் நிறைவடைந்து விட்டன. ஆனால் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக சாலையோரமாக மின்கேபிள் பதிக்கும் பணி மட்டும் நடந்து வருகிறது. இந்த பணிகள் வேகமாக நடந்தால் ஓரிரு நாட்களில் முடித்து விடலாம். ஆனால் குறைவான ஆட்களை வைத்து வேலை நடப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது.

இந்த சாலையை விரைந்து சீரமைத்தால் அனைத்து பஸ்களும் வழக்கம்போல் சென்றுவிடும். இதனால் மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும். எனவே பணிகளை விரைந்து முடித்து தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story