நாங்குநேரி போலீஸ் நிலையத்தில்: போலீஸ்காரர் தற்கொலை முயற்சியா? அதிகாரிகள் விசாரணை


நாங்குநேரி போலீஸ் நிலையத்தில்: போலீஸ்காரர் தற்கொலை முயற்சியா? அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 11 Dec 2018 3:45 AM IST (Updated: 11 Dec 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாங்குநேரி,

நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் வெங்கடேஷ் (வயது 30). இவர் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. எனவே, வெங்கடேஷ் போலீஸ் நிலையத்தின் மாடியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய சகோதரியின் குழந்தைக்கு காது குத்தும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தாய்மாமன் என்ற முறையில், வெங்கடேசை சடங்கு செய்வதற்காக அவருடைய சகோதரி அழைத்து இருந்தார். இந்த விழாவுக்கு செல்வதற்காக வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் 3 நாட்கள் விடுமுறை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். பணி அதிகமாக இருந்ததால் விடுமுறைக்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேஷ் நேற்று காலை போலீஸ் நிலைய மாடிக்கு சென்றார். அங்கு இருந்த டியூப்லைட்டை உடைத்து கையில் கீறிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய வலது கையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதை பார்த்த மற்ற போலீசார், வெங்டேசை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வெங்கடேஷ் டியூப்லைட்டை உடைத்து கையில் கிழித்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது விடுமுறை தராத விரக்தியில் இதுபோன்று நடந்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் கூறுகையில், “வெங்கடேஷ் போலீஸ் நிலையத்தில் நடந்து கொண்ட விவரம் குறித்து அறிக்கை பெற்று உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைக்கு பிறகு தான் வழக்குப்பதிவு செய்வதா? அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்“ என்றார். 

Next Story