கோவில்பட்டி : உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை - பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் பயிரிட்ட மக்காச்சோள பயிர்களில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த படைப்புழுக்கள் தாக்கியதில் சேதம் அடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
சங்க மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமையா, செயலாளர் நல்லையா, தாலுகா செயலாளர்கள் லெனின்குமார், வி.கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், வேலாயுதம், தாலுகா தலைவர்கள் சிவராமன், ரவீந்திரன், பி.கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன், தாலுகா அமைப்பாளர்கள் சங்கரலிங்கம், ராஜகனி உள்பட பலர் கலந்து கொண்டனர். படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்களை எடுத்து வந்து, விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.
உதவி கலெக்டர் விஜயா அலுவலக பணிக்காக வெளியே சென்று இருந்தார். இதையடுத்து முற்றுகையிட்டவர்களிடம், தாசில்தார் பரமசிவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர், படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்த பயிர்களை வேளாண்மை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story