குமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டம்


குமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2018 11:00 PM GMT (Updated: 10 Dec 2018 9:23 PM GMT)

குமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் அவரவர் சொந்த மாவட்டங்களில் பணிபுரிய மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு மின்வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முதல் 3 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்து மக்களைத்தேடி என்ற போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதையொட்டி கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் நாகேஸ்வரகாந்த் தலைமை தாங்கினார். இதேபோல் தோவாளை தாலுகாவுக்கு பூதப்பாண்டியிலும், கல்குளம் தாலுகாவுக்கு தக்கலையிலும், விளவங்கோடு தாலுகாவுக்கு குழித்துறையிலும் இந்த போராட்டங்கள் நடைபெற்றன.

இதனால் கிராம நிர்வாக அலுவலக பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. மேலும் பொதுமக்கள் வருவாய்த்துறை சான்றுகள் பெற முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள். நேற்றைய போராட்டத்தில் 119 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டதாக மாவட்ட செயலாளர் நாகேஸ்வரகாந்த் கூறினார்.

மேலும் வருகிற 13, 14-ந் தேதிகளில் உரிமைகளை தேடி என்ற பெயரில் தாலுகா அலுவலகங்கள் முன் காலை, மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், 17, 18-ந் தேதிகளில் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுப்பது என்றும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Story