பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை
பனையூர் பகுதியில் தனது 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த கானத்தூர் அருகே உள்ள பனையூர் 7–வது அவென்யூவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவருடைய மனைவி ஜெயா (25). இவர்களுக்கு 1½ வயதில் கிஷோர் என்ற மகன் இருந்தான். சுரேஷ் தனியார் பண்ணை ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்களது சொந்த ஊர் மயிலாடுதுறை ஆகும்.
கடந்த சில தினங்களாக சுரேஷ் மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டின் அறையில் சுரேஷ் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் குழந்தை கிஷோரும் பிணமாக கிடந்தான். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயா இருவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதுபற்றி கானத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, சப்–இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் அங்கு சென்று தந்தை–மகன் இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
மேலும், அவரது வீட்டில் சோதனை செய்தபோது, சுரேஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அதில், என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள். நான் யாருக்கும் பயன் இல்லாமல் உள்ளேன். ஜெயா என்னை மன்னித்துவிடு. உன்னிடம் கூறாமல் இந்த முடிவை எடுத்து விட்டேன்.
எனது அக்கா கணவர் நகை, பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்கிறார். என்னால் நகை, பணம் கொடுக்க முடியவில்லை. எனவே எனது அக்கா கணவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா, அப்பாவிடம் சண்டை போட வேண்டாம். மகன் கிஷோரை விட்டு செல்ல மனம் இல்லை. எனவே அவனையும் என்னுடன் அழைத்து செல்கிறேன்’ என எழுதப்பட்டு இருந்தது.
சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளும் முன் பால் பாட்டிலில் விஷம் கலந்து குழந்தைக்கு கொடுத்து உள்ளார். அந்த பாலை குடித்த குழந்தை கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.