மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 30 பேருக்கு நலத்திட்ட உதவி - கலெக்டர் ஷில்பா வழங்கினார்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 30 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் அவர் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்தும், பிளாஸ்டிக் பையை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்றும் எடுத்துக்கூறி, தங்களது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திட வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கூட்டத்தில், முதல்-அமைச்சரின் பொது நிவாரண திட்டத்தின் கீழ் ஒருவருக்கு இறப்புத்தொகையாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும், அம்பை தாலுகாவை சேர்ந்த ஒருவருக்கு இறப்புத்தொகையாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையையும், 3 விவசாயிகளுக்கு விவசாய எந்திரங்களும் வழங்கப்பட்டன. பாளையங்கோட்டை தாலுகாவை சேர்ந்த 25 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாகளையும் கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
முன்னதாக மனித உரிமைகள் தினத்தையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷில்பா தலைமையில் ஊழியர்கள் மனித உரிமைதின உறுதி மொழி எடுத்தனர். இதில் நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாராணவரே, கலால் உதவி ஆணையாளர் பழனிக்குமார், சிரஸ்தார் சிவகுமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story