ராமதுர்கா அருகே பாசன கால்வாயில் திடீர் உடைப்பு 40 ஏக்கரில் நெற்பயிர்கள் நாசம்
ராமதுர்கா அருகே பாசன கால்வாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் வயல்களில் புகுந்து சுமார் 40 ஏக்கரில் நெற்பயிர்கள் நாசமானது.
ராய்ச்சூர்,
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் ராமதுர்கா தாலுகாவில் நாராயணபுரா அணைக்கட்டு உள்ளது. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீர் ராய்ச்சூர் மாவட்டத்தில் குடிநீர் தேவைக்கும், பாசன தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து தற்போது தேகரதுர்கா பகுதி பாசனத்திற்காக 17-வது பாசன கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த பாசன கால்வாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் கால்வாயில் பாய்ந்தோடிய நீர் அருகில் உள்ள வயல்வெளிகளில் பெருக்கெடுத்து ஓடியது.
40 ஏக்கரில் விவசாய பயிர்கள் நாசம்இதில் அங்கு சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதுடன், அடித்துச்செல்லப்பட்டன. இதனால் சுமார் 40 ஏக்கரில் நெற்பயிர்கள் நாசமானதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த விவசாயிகள் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, வயல்வெளிகளில் நீர்புகுந்ததால் பயிர்கள் நாசமானதை பார்த்து வேதனை அடைந்தனர். சம்பவம் பற்றி விவசாயிகள், நாராயணபுரா அணை நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதைதொடர்ந்து அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட நீர் உடனடியாக நிறுத்தப்பட்டது. ேமலும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள், பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கால்வாயை உடனே சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு, பாசனத்திற்கு தண்ணீர் விடப்படும் என்றனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில், சமீபத்தில் தான் இந்த நாராயணபுரா அணைக்கட்டு பாசன கால்வாய்களை தூர்வாரி, புதுப்பிக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. இதனால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, 40 ஏக்கரில் விவசாய பயிர்கள் நாசமாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், கால்வாயை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் முதற்கட்டமாக மணல்மூட்டைகளை அடுக்கி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சீரமைப்பு பணிகள் முடிந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.