பொன்னேரி அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதியது டேங்க் உடைந்து டீசல் கொட்டியது
பொன்னேரி அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதியது. இதில் டேங்க் உடைந்து டீசல் கொட்டியது.
பொன்னேரி,
எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை லாரி புறப்பட்டது. காலை 4 மணியளவில் பொன்னேரி அருகே வேன்பாக்கத்தில் அரசு பள்ளி அருகேவந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
இதில் லாரியின் முன்பகுதி தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதும் லாரியில் இருந்த டிரைவரும், கிளீனரும் தப்பி ஓடி விட்டனர். இதற்கிடையே லாரி மோதிய வேகத்தில் அதன் டீசல் டேங்க் உடைந்து டீசல் கொட்டியது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் டீசல் மீது மண்ணை தூவினர். இதனால் லாரி தீப்பிடிக்காமல் தடுக்கப்பட்டது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதற்கிடையே விபத்து பற்றி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
பள்ளி அருகே வேகத்தடை இல்லை. சாலை விரிவாக்கப்பணி முடியாமல் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக குற்றம் சாட்டினர். பொன்னேரி போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போக செய்தனர்.