பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது
பல்லடம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காமநாயக்கன்பாளையம்,
கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் பகுதியை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவருடைய மனைவி வசந்தா. இவர்களுடைய மகள் மஞ்சுளா (வயது 20). திருமலைக்குமார் தனது குடும்பத்துடன்திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உப்பிலிபாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மஞ்சுளாவும், அந்த பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த உப்பிலிபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (20) என்ற வாலிபரை மஞ்சுளா, காதலித்து உள்ளார். இவர்களின் காதல் விவகாரம், திருமலைக்குமாருக்கு தெரியவந்ததால் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து மகளையும், மனைவியையும், சொந்த ஊரான முடீசுக்கு அனுப்பி வைத்தார். சொந்த ஊருக்கு சென்ற மஞ்சுளா, செல்போன் மூலம் கார்த்திகேயனுடன் தொடர்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முடீசில் இருந்து பல்லடம் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காதலன் கார்த்திகேயன் வீட்டிற்கு மஞ்சுளா சென்றுள்ளார்.
இதை அறிந்த அவருடைய தந்தை, மஞ்சுளாவை செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்ததோடு வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அதை ஏற்க மறுத்த மஞ்சுளா, காதலன் வீட்டிலேயே தங்கினார். இந்த நிலையில் தான் மஞ்சுளா அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் விரைந்து சென்று மஞ்சுளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு காதலனிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, கார்த்திகேயனை, மஞ்சுளா வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவருடைய குடும்பத்தினர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து சிறிது காலம் உங்களது வீட்டிற்கோ அல்லது விடுதிக்கோ சென்று தங்கிக்கொள். அதன்பின்னர் திருமணம் செய்து கொள் கிறேன் என்று கார்த்திகேயன் கூறியுள்ளார்.
அதை மஞ்சுளா ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது வீட்டை விட்டு வெளியேறு அல்லது எங்காவது போ என்று கோபத்தில் கூறி விட்டு கார்த்திகேயன் சென்று விட்டார். நம்பி வந்த காதலன் இப்படி கூறிவிட்டதால், மன வேதனை அடைந்த மஞ்சுளா அங்கேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை யடுத்து இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை பல்லடம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story