ஜல்லிக்கட்டு முன்பதிவில் பயிற்சி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; கலெக்டரிடம் கோரிக்கை


ஜல்லிக்கட்டு முன்பதிவில் பயிற்சி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Dec 2018 4:32 AM IST (Updated: 11 Dec 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு முன்பதிவில் பயிற்சி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை,

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் சார்பில் கலெக்டர் நடராஜனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து ஊர்களிலும் நடக்கும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறோம். சில ஊர்களில் ஜல்லிக்கட்டுக்கு முன்னதாக நடக்கும் மாடுபிடி வீரர்கள் பதிவை முன்கூட்டி அறிவிக்காமல் முடித்து விடுகின்றனர். எனவே எங்களை போன்று முறையான பயிற்சி பெற்ற வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாமல் போய்விடுகிறது. அதுமட்டுமின்றி ஒரே தேதியில் 2 ஊர்களில் முன்பதிவு நடக்கிறது. இதனால் ஒரு ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் மட்டுமே பங்கேற்க முடிகிறது. எங்களை போன்று முறையான பயிற்சி பெற்ற வீரர்களின் நோக்கம் சிறந்த காளைகளை அடக்குவது தான். ஆனால் அந்த வாய்ப்பு எங்களை விட்டு பறி போய்விடுகிறது.

எனவே ஜல்லிக்கட்டு போட்டியில் நாங்கள் எளிதில் கலந்துகொள்ளும் விதமாக எங்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். பதிவின்போது எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறப்பு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் அந்த மனுவில் யாருக்கு அடையாள அட்டை கொடுக்க வேண்டும் என்பதற்கான மாடுபிடி வீரர்கள் பட்டியல் இடம்பெற்று உள்ளது.

ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு மன உளைச்சல்கள் ஏற்படுகிறது. அதாவது முறையாக பயிற்சி பெற்று இருக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு குழு முறையால் விளையாடும் வாய்ப்பு குறைகிறது. சிறந்த வீரர்கள் முழுமையாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியவில்லை. முக்கியமாக இந்த குழு முறையால் வீரர்களுக்கு அதிக காயம் ஏற்படுகிறது. அதாவது வீரர்கள் அடுத்த குழுவில் தொடர வேண்டுமென்றால் குறைந்தது 2 மாடுகளை பிடிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் வீரர்கள் எல்லா காளைகளையும் பிடிக்க முயன்று காயம் அடைகின்றனர். மேலும் குழு முறையால் ஒவ்வொரு முறையும் வீரர்களை மாற்றும் போது 20 நிமிடங்கள் வீதம் மொத்தம் 2.50 மணி நேரம் வீணாகிறது. குழு முறையால் களம் காணாத வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. எனவே நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களை பல்வேறு குழுக்கள் முறையில் இறக்காமல் ஒரே குழுவாக இறக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story