அரசியலில் இருந்து ஓய்வுபெற்று விட நினைக்கிறேன் - அமைச்சர் கந்தசாமி அதிரடி பேச்சு
அரசியலில் இருந்து ஓய்வுபெற்று விட நினைக்கிறேன் என்று அமைச்சர் கந்தசாமி பேசினார்.
புதுச்சேரி,
புதுவை அரசின் மகளிர் ஆணையம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம், அதேகொம் பின்னகம் ஆகியன இணைந்து மனித உரிமைநாள் கருத்தரங்கினை புதுவை மாநில கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடத்தின. நிகழ்ச்சிக்கு முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு கருத்தரங்கினை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தோம். ஆனால் இப்போது அவற்றை செயல்படுத்த எங்கோ கேட்கவேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் எல்லாம் தேர்தலில் நிற்கவில்லை.
மக்களுக்கு எது தேவையோ, அதை அதிகாரிகள் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுத்த வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய முதன்முதலில் குரல் கொடுத்தவன் நான். நான் அமைச்சராக இருந்தபோதுதான் முதலில் அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டது. பின்னாளில் அது முதல்–அமைச்சராக ரங்கசாமி இருந்தபோது அமலுக்கு வந்தது.
ஆனால் இப்போது 35 ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய முடியாத நிலை உள்ளது. ஏனெனில் நமக்கு உரிமையில்லை என்ற நிலை உள்ளது. மாநில வருவாய் குறைந்துள்ள நிலையில் வாங்கிய கடனுக்காக ரூ.300 கோடி வட்டி கட்டியுள்ளோம். வருகிற மார்ச் மாதம் ரூ.1000 கோடி கட்டவேண்டி உள்ளது.
பிரதமர் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது முதல் பல்வேறு பிரச்சினைகளினால் மாநில அரசின் வருவாய் குறைந்துவிட்டது. மத்திய அரசும் நமக்கு அளிக்கும் மானியத்தை 70 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்துவிட்டது.
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளம் வழங்க முடியவில்லை. அவர்களை பணியில் இருந்து எடுக்க சொல்கிறார்கள்.
நான் கடந்த காலங்களில் அமைச்சராக இருந்தபோது பொதுமக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினேன். ஆனால் இப்போது எதையும் செய்ய முடியவில்லை. பேசாமல் அரசியலில் இருந்தே ஓய்வுபெற்றுவிடலாமா? என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.