நாடு கடத்தி கொண்டுவரப்படும் விஜய் மல்லையாவை அடைக்க தயார் நிலையில் ஆர்தர் ரோடு சிறை


நாடு கடத்தி கொண்டுவரப்படும் விஜய் மல்லையாவை அடைக்க தயார் நிலையில் ஆர்தர் ரோடு சிறை
x
தினத்தந்தி 11 Dec 2018 5:42 AM IST (Updated: 11 Dec 2018 5:42 AM IST)
t-max-icont-min-icon

நாடு கடத்தி கொண்டுவரப்படும் விஜய் மல்லையாவை அடைத்து வைக்க மும்பை ஆர்தர் ரோடு சிறை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

கிங்பிஷர் மதுபான அதிபர் விஜய் மல்லையா ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடனை செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றார். அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது.

இந்த விவகாரம் குறித்த விசாரணை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. இதில் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் விஜய் மல்லையாவை அடைப்பதற்காக மும்பை ஆர்தர் ரோடு சிறை முழுவீச்சில் தயாராகி உள்ளது. அந்த சிறையில் அவரை அடைப்பதற்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விஜய் மல்லையா ஆர்தர் ரோடு சிறையில் பலத்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 2 மாடி கட்டிடத்தில் அடைக்கப்பட உள்ளார்.

இந்த சிறையில் தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப் அடைக்கப்பட்டு இருந்தான். அப்போது இந்த சிறை வெடிகுண்டு வீச்சிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டது. இந்த சிறையில் தான் மராட்டியத்தை சேர்ந்த முன்னாள் மந்திரி சகன் புஜ்பால், ரமேஷ் கதம் எம்.எல்.ஏ., ஷீனா போரா கொலை வழக்கில் கைதான பீட்டர் முகர்ஜி உள்ளிட்டவர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இது குறித்து சிறை ஊழியர் ஒருவர் கூறியதாவது:-

விஜய் மல்லையாவை இங்கு பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைக்க தயாராக உள்ளோம். அவருக்கு ஏதாவது உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க சிறையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் சிகிச்சை மையம் உள்ளது. அங்கு 3 டாக்டர்கள் எப்போதும் பணியில் இருப்பாா்கள். மேலும் அவர் அடைக்கப்பட்டு உள்ள கட்டிடம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நவீன ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜய் மல்லையா அடைக்கப்பட உள்ள ஆர்தர் ரோடு சிறை நாட்டிலேயே சிறந்த சிறை என மத்திய உள்துறை அதிகாரி கூறியுள்ளார். இந்தநிலையில் விஜய் மல்லையா அடைக்கப்பட உள்ள தகவல் ஆர்தர் ரோடு சிறை ஊழியர்கள், கைதிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் மல்லையா எப்போது வருகிறார் என ஜெயில் கைதிகள் ஆர்வமாக கேட்பதாக ஜெயிலர் ஒருவர் கூறினார்.

ஆர்தர் ரோடு சிறை 1925-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இது மாநிலத்திலேயே அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை ஆகும். இங்கு 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

Next Story