கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை நடைபாதை கடைகள் அகற்றியதற்கு எதிர்ப்பு
கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதை கண்டித்து நேற்று வியாபாரிகள் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதை கண்டித்து நேற்று வியாபாரிகள் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நடைபாதை கடைகள் அகற்றம்கோவில்பட்டி நகரசபை முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட்டில் நடைபாதை கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நகரசபை ஆணையாளர் உத்தரவின் பேரில் நகரசபை அலுவலர்கள், ஊழியர்கள் மார்க்கெட்டுக்கு சென்று நடைபாதை கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நடைபாதை கடைகளை அகற்றிவிட்டு, மார்க்கெட்டுக்குள் பொதுமக்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில் பாதை அமைக்கப்பட்டது. இதற்கு வியாபாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், 30–க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளை நகரசபையினர் அகற்றினர்.
நகரசபை அலுவலகம் முற்றுகைஇந்த நிலையில் நடைபாதை கடைகளை அகற்றியதைக் கண்டித்து, வியாபாரிகள் கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். வியாபாரிகளுடன் 5–வது தூண் தலைவர் சங்கரலிங்கம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், மருத்துவ சங்க முன்னேற்ற கழக செயலாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைஇதை தொடர்ந்து முற்றுகையிட்டவர்களிடம், நகரசபை மேலாளர் முத்துசெல்வம், வருவாய் அலுவலர் ராஜசேகரன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டெல்லாபாய் ஆகியோர் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், நகரசபை ஆணையாளர் முகாம் சென்றுள்ளார். அவர் வந்தவுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மார்க்கெட்டில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.