புதுச்சேரியில் இருந்து வேலூருக்கு: சரக்கு வாகனத்தில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
புதுச்சேரியில் இருந்து வேலூருக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் அருவப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் இரவு நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த சரக்கு வாகனத்தினுள் 70 அட்டைப்பெட்டிகளில் 3,360 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா மேலக்காடு பகுதியை சேர்ந்த சிவா (வயது 35) என்பதும், புதுச்சேரியில் இருந்து வேலூருக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சிவாவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.3½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story