சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை


சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Dec 2018 5:15 AM IST (Updated: 11 Dec 2018 11:49 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை எலிகள் கடித்து குதறியதால் உறவினர்கள் மருத்துவமனையை முற்று கையிட்டனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பரமேஸ்வரநல்லூர் சொக்கலிங்கம் நகரை சேர்ந்தவர் நாராயணன் மகன் வைத்தீஸ்வரன் (வயது 22). சிறுவயதிலேயே வைத்தீஸ்வரனின் தாய்-தந்தை இறந்ததால் சித்தப்பா சரவணமுருகன் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துள்ள வைத்தீஸ்வரன் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் அவர் வெளிநாடு செல்லவில்லை.

இந்த நிலையில் வைத்தீஸ்வரனுக்கு, சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்த பாண்டியன் மகள் ரத்தினபிரியா(21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்கிடையே நாளடைவில் காதலாக மாறியது.

அதன்பின்னர் இருவரும் செல்போனில் பேசியும், பல்வேறு இடங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். கடந்த 9-ந்தேதி ரத்தினபிரியா செல்போனில் நீண்ட நேரமாக வைத்தீஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ரத்தினபிரியாவின் தாய் இந்திரா(45), ஏன் நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறாய் என கண்டித்தார். இதில் மனமுடைந்த ரத்தினபிரியா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. இதுபற்றி அறிந்த வைத்தீஸ்வரன் ரத்தினபிரியாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து காதலி இறந்த வேதனையில் வைத்தீஸ்வரன் இரவு வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதற்கிடையே வைத்தீஸ்வரனை பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் வைத்தீஸ்வரன் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வைத்தீஸ்வரனை மீட்டு மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வைத்தீஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வைத்தீஸ்வரனின் உடலை பார்க்க சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு வந்தனர். அப்போது அவரது உடலின் பல இடங்களில் எலிகள் கடித்து குதறி இருந்தது. இதை பார்த்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் எந்தவொரு வசதிகளும் இல்லை. அதனால் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். ஊழியர்களின் கவனக்குறைவால் தான் வைத்தீஸ்வரனின் உடலை எலிகள் கடித்து குதறியுள்ளன. அதனால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து இதுகுறித்து சரவணமுருகன் சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி இறந்த வேதனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story