3-வது சுரங்கம் அமைக்க: ‘என்.எல்.சி.க்கு நிலம் கொடுக்கமாட்டோம்; நிர்பந்தம் செய்தால் தற்கொலை செய்வோம்’ - கருத்துக்கேட்பு கூட்டத்தில் கிராம மக்கள் அறிவிப்பு
3-வது சுரங்கம் அமைக்க என்.எல்.சி.க்கு நிலம் கொடுக்கமாட்டோம், நிர்பந்தம் செய்தால் தற்கொலை செய்வோம் என்று கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலெக்டர் முன்பு கிராம மக்கள் அறிவித்தனர்.
மந்தாரக்குப்பம்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ளது என்.எல்.சி. இந்தியா நிறுவனம். இந்த நிறுவனத்தில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு நிலக்கரி எடுக்கப்பட்டு, அதன் மூலம் மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
சுரங்கங்களை விரிவுப்படுத்துதல், மின்உற்பத்தியை அதிகரித்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு என்.எல்.சி. நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நெய்வேலி பகுதியில் 3-வது சுரங்கம் அமைக்க என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கம்மாபுரம் ஒன்றியம் மற்றும் புவனகிரி ஒன்றியத்தில் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுரங்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுரங்கம் அமைப்பதற்காக 2 ஒன்றியங்களில் உள்ள புத்தூர், சிறுவரப்பூர், கோட்டிமுலை, சின்ன கோட்டிமுலை, பெருந்துறை, ஒட்டிமேடு, அகரஆலம்பாடி, ஆதனூர், சின்னநெற்குணம், பெரியநெற்குணம் உள்பட 40 கிராமங்களும், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளது.
மேலும் 3-வது சுரங்கம் அமைக்கும் திட்டம் குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கிராம மக்கள், முக்கிய பிரமுகர்கள், விவசாயிகள் ஒன்று சேர்ந்து அகர ஆலம்பாடி கிராமத்தில் உள்ள சமுதாயநலக்கூடத்தில் நேற்றுமுன்தினம் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இதில், 3-வது சுரங்கம் அமைக்க நிலம் கொடுக்க மாட்டோம் என்று 40 கிராம மக்களும் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த நிலையில் நேற்று காலை மந்தாரக்குப்பம் என்.எல்.சி. மைதானத்தில் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
மேலும் இந்த கூட்டத்திற்கு 40 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர். இதில் சப்-கலெக்டர்கள் பிரசாந்த் (விருத்தாசலம்), விஷ்ணுமகாஜன் (சிதம்பரம்), தாசில்தார் கவியரசு, என்.எல்.சி. அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியவுடன் கலெக்டர் அன்புசெல்வன், என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைப்பது தொடர்பாக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். இந்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
தொடர்ந்து என்.எல்.சி. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி வேலன் பேசும் போது, என்.எல்.சி. சுரங்கங்களால் எந்தவித பாதிப்பும் இல்லை. நிர்வாகம் முறையாக செய்கிறது என்றார். இதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது கலெக்டர் அன்புசெல்வன் தலையிட்டு, என்.எல்.சி. நிறுவனம் பற்றி அதிகாரிகள் யாரும் பேச வேண் டாம். 3-வது சுரங்கம் பற்றி மட்டும் சில விளக்கங்களை கூறுமாறு என்.எல்.சி. அதிகாரியிடம் கூறினார்.
இதையடுத்து என்.எல்.சி. அதிகாரி வேலன் பேசுகையில், என்.எல்.சி. 3-வது சுரங்கம் 4841.99 ஹெக்டேரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 11.5 டன் மில்லியன் பழுப்பு நிலக்கரி கிடைக்கும். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் மின் பற்றாக்குறையை முற்றிலும் நிவர்த்தி செய்ய முடியும். சுரங்கங்களால் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. பாதுகாப்பான முறையில் சுரங்கங்கள் அமைத்து மக்கள் நலனில் என்.எல்.சி. என்றும் உறுதுணையாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து கிராம மக்கள் தங்களது பல்வேறு கருத்துக்களை பதிவு செய்தனர். அதன் விவரம் வருமாறு:-
அகரம் ஆலம்பாடி குணசேகரன்:- எங்கள் கிராமத்தில் இருந்து என்.எல்.சி.க்கு ஒரு சென்ட் நிலம் கூட கொடுக்கமாட்டோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்தமாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவோம். மேலும் கிராம மக்கள் கூட்டத்தை கூட்டி என்.எல்.சி.க்கு நிலம் கொடுக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றுவோம்.
எறும்பூர் விவசாயி வெங்கடேசன் :- ஏற்கனவே என்.எல்.சி. நிலம் கொடுத்தவர்கள் இன்றும் போராடி தான் வருகின்றனர். என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்துவிட்டு தற்போது விஜயமாநகரம் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு இன்னும் பட்டா கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பலர் எழுந்து தங்களின் கருத்துக்களை கூறினர். இதனை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டு இருந்தனர். அப்போது ஒருகட்டத்தில் கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து, நாங்கள் என்.எல்.சி.க்கு நிலம் கொடுக்கமாட்டோம், மீறி நிர்பந்தம் செய்தால் வீட்டிற்கு ஒருவர் வீதம் தற்கொலை செய்வோம் என்று கலெக்டர் முன்பு அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து பலர் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மதியம் 3.15 மணிவரை நீடித்தது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story