வெள்ளகோவில் அருகே ஓடும் வேனில் திடீர் தீ; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் தப்பினர்
வெள்ளகோவில் அருகே ஓடும் வேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் தப்பினர்.
வெள்ளகோவில்,
கரூர் வடகம்பாடியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 29). இவர் தனது மனைவி, 3 வயது மகன் மற்றும் மாமியாருடன் ஒரு வேனில் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் அவர்கள் 4 பேரும் அதே வேனில் வடகம்பாடி திரும்பினார்கள். வேனை ராஜலிங்கம் ஓட்டினார். முன் இருக்கையில் ராஜலிங்கத்தின் மனைவி, தனது மகனுடன் அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் ராஜலிங்கத்தின் மாமியார் அமர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் வேன், வெள்ளகோவில்–கரூர் சாலையில் தென்னிலை கரைப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வேன் என்ஜினில் இருந்து புகை வந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ராஜலிங்கம் உடனே வேனை நிறுத்தினார். பின்னர் வேனில் இருந்த அனைவரும் அவசரமாக வேனின் கதவை திறந்து வெளியே வந்தனர். அதற்குள் வேன், திடீரென்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இந்த தீ வேன் முழுவதும் மளமள வென்று பரவியது. இது குறித்து வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு ராஜலிங்கம் தகவல் தெரிவித்தார். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் வேன் எரிந்து சேதம் அடைந்தது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வேன் கியாஸ் மூலம் இயங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.