மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் ஊருணியை சுத்தம் செய்ய வலியுறுத்தல்
மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் உள்ள ஊருணியை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் பொது ஊருணி உள்ளது. இந்த ஊருணி தற்போது பாசி படர்ந்து காணப்படுகிறது. மேலும் ஊருணியை சுற்றிலும் தடுப்பு சுவர் இல்லாததால் திறந்தவெளி போல ஆபத்தாக காட்சியளிப்பதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:– ஊருணி முழுவதும் பாசி படர்ந்து காணப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. ஊருணிக்கு எதிரே ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளதால், தடுப்பு சுவர் இல்லாத ஊருணியால் பள்ளி குழந்தைகள் ஆபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
இதனால் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர். பெரும்பச்சேரி பஸ்நிலையத்தையொட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியும் ஊருணி அருகில் உள்ளதால் மாணவ–மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர். மேலும் மாணவ, மாணவிகள் ஒருசிலர் கை, கால் கழுவ விபரீதம் புரியமால் ஊருணியில் இறங்குகின்றனர்.
இந்த ஊருணியில் கிராம மக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் பயன்படுத்தி வருகின்றனர். 15 அடிக்கு மேல் ஆழமுள்ள ஊருணியில் சமீபத்தில் வைகை ஆற்றில் நீர்வரத்து இருந்ததால், ஊருணி முழுவதும் நீர் நிரம்பியுள்ளது. அதில் ஏராளமான மீன்கள் இருப்பதால் சிறுவர்கள் ஆர்வத்துடன் மீன் பிடிக்க தண்ணீரில் இறங்குகின்றனர்.
தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்தும், முட்செடிகளும், நாணல்களும் வளர்ந்தும் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த இந்த இளைஞர்கள் தினமும் ஊருணியில் உள்ள பாசியை முடிந்த அளவு அகற்றி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பாசி படர்ந்த ஊருணியை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும், அதே போல விபத்து ஏற்படும் முன்பு ஊருணியைச் சுற்றி தடுப்புச்சுவர் ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.