கோத்தகிரி அருகே: போலீசாரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


கோத்தகிரி அருகே: போலீசாரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2018 3:45 AM IST (Updated: 12 Dec 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே போலீசாரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம குடியிருப்புகளுக்கு நடுவே தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலமுறை கோத்தகிரி தாசில்தார், குன்னூர் கோட்டாட்சியர், குன்னூர் உதவி கலெக்டர் ஆகியோர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டங்கள் நடந்தன. ஆனால் முடிவு ஏற்படவில்லை.

கடந்த 5-ந் தேதி செல்போன் கோபுரத்திற்கு இணைப்பு கொடுப்பதற்கு ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டது. இதனை அறிந்த கிராம மக்கள் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செல்போன் நிறுவன அதிகாரிகள் ஜெனரேட்டரை திரும்ப எடுத்து சென்றனர். இந்த நிலையில் செல்போன் கோபுரத்திற்கு செல்லும் நடைபாதையில் கிராம மக்கள் கற்களை கொட்டி வழியை அடைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து தனியார் செல்போன் கோபுரத்திற்கு நிலம் வழங்கிய ரமேஷ் என்பவர் போலீசில் புகார் செய்தார். புகாரை அடுத்து போலீசார் கேர்பெட்டா கிராமத்திற்கு வந்து போக்குவரத்து இடையூறாக கொட்டப்பட்ட கற்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து விட்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து போலீசாரை கண்டித்து கேர்பெட்டா கிராம தலைவர் கிருஷ்ணன், ஊர் பிரமுகர்கள் ராமன், ராஜீ உள்ளிட்டோர் தலைமையில் ஒன்று திரண்டு கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டு செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது, வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனவும், போலீசார் மிரட்டுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியைத் தொடர்ந்தால் தங்களது ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைத்து ஊரைக்காலி செய்வோம் என்று கூறினார்கள். இதில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மனோகரன், கோத்தகிரி பேரூராட்சி முன்னாள் தலைவர் வாப்பு உள்பட பலர் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஊர் பிரமுகர் ராமன் கூறியதாவது:- படுகர் இன மக்களின் முக்கிய பண்டிகையான ஹெத்தையம்மன் பண்டிகை வரும் 24-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த பண்டிகையின் போது ஒரு நாள் கேர்பெட்டா கிராமத்தில் 20 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். செல்போன் கோபுரம் அமைக்கும் பணிளை நிறுத்தாவிட்டால், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நாளில் கிராமமக்கள் அனைவரும் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்து நூதன போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார்.

இதுகுறித்து கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் கூறுகையில், செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு கோர்ட்டு தான் தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஆனால் பொதுமக்கள் நடப்பதற்கு இடையூறாக கற்களை நடைபாதையில் கொட்டி வைத்திருப்பதாக புகார் வந்தது. இதனால் அங்கு சென்று போக்குவரத்து இடையூறாக கொட்டப்பட்ட கற்களை அகற்ற சொன்னோம் என்று கூறினார்.

Next Story