திண்டுக்கல் பகுதியில் தண்டவாளத்தில் கிடந்த 3 உடல்கள் : யார் அவர்கள்? போலீசார் விசாரணை


திண்டுக்கல் பகுதியில் தண்டவாளத்தில் கிடந்த 3 உடல்கள் : யார் அவர்கள்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Dec 2018 3:45 AM IST (Updated: 12 Dec 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பகுதியில் தண்டவாளத்தில் 3 உடல்கள் கிடந்தன. அவர்கள் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல்-சின்னாளப்பட்டி இடையே ஏ.வெள்ளோடு பிரிவு அருகே தண்டவாளத்தில் பிணம் கிடப்பதாக நேற்று காலை திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் சிதைந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்றும், அவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. அவர் வெள்ளை வேட்டியும், பச்சை கலர் கோடு போட்ட அரை கை சட்டையும், ஆரஞ்சு கலர் துண்டும் அணிந்திருந்தார். அவருடைய பெயர், விவரம் தெரியவில்லை. இதையடுத்து, அவருடைய பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதேபோல, வேடசந்தூர் அருகே கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை என்ற இடத்தில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவருக்கு சுமார் 55 வயது இருக்கும் என்பது தெரியவந்தது.

அவர் பச்சை கலர் கட்டம் போட்ட கைலியும், வெள்ளை துண்டும் அணிந்திருந்தார். இவர், மும்பை-நாகர்கோவில் செல்லும் ரெயிலில் அடிபட்டு இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, நேற்று காலை திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் தண்டவாளத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா? என ரெயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி திறந்தவெளி முட்புதரில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதை கண்டனர்.

இதுகுறித்து திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரித்ததில் அவருக்கு 25 வயது இருக்கும், ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும், வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவருடைய உடலின் அருகே ஒரு செல்போன் கிடந்தது. அதனை கைப்பற்றி இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story