பல்லாவரம் அருகே லாரி உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
பல்லாவரம் அருகே லாரி உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர், சிவசங்கரன் நகரில் வசித்து வருபவர் கங்கா(எ)சுரேஷ்(வயது 35). இவர் சொந்தமாக லாரி வைத்து, அதனை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார். மேலும், மணல் விற்பனையும் செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் மர்ம கும்பல் ஒன்று வந்தது.
அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை, சுரேஷ் வீட்டின் மீது வீசி விட்டு தப்பிச் சென்றனர். அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சுரேஷ் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் வீட்டின் முன் பகுதியில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சுரேஷ் சங்கர்நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். 2 மாதங்களுக்கு முன்பு சுரேசுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் மணல் விற்பனை செய்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த முன் விரோதத்தில் அவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.