திருவண்ணாமலையில்: மனநலம் பாதித்த பெண் கிணற்றில் பிணமாக மிதந்த மர்மம் - கொலையா? போலீசார் விசாரணை


திருவண்ணாமலையில்: மனநலம் பாதித்த பெண் கிணற்றில் பிணமாக மிதந்த மர்மம் - கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Dec 2018 4:00 AM IST (Updated: 12 Dec 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் மனநலம் பாதித்த பெண் கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை புதிய கார்ணர் தெருவை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்களது மகள் இந்திரா (வயது 33), மகன் பாலாஜி. இந்திரா கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை பாலாஜி வேலைக்கு சென்று விட்டார். கர்ணனும், அவரது மனைவி ஆதிலட்சுமியும் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டில் தனியாக இருந்த இந்திராவை காணவில்லை.

பதற்றம் அடைந்த அவர்கள் இந்திராவை தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் பார்த்தபோது அதில் இந்திரா மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அது குறித்து மகன் பாலாஜிக்கு கர்ணன் தெரிவித்தார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்து திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்த இந்திராவை வெளியே கொண்டு வந்து பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது, அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திரா தற்கொலை செய்து கொண்டாரா, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story