ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்: நிர்மலாதேவி மீதான வழக்கு 19–ந் தேதிக்கு ஒத்திவைப்பு


ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்: நிர்மலாதேவி மீதான வழக்கு 19–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 12 Dec 2018 4:30 AM IST (Updated: 12 Dec 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் மீதான வழக்கு 19–ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிர்மலாதேவி, கருப்பசாமி மற்றும் முருகன் ஆகியோர் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த 4–ந்தேதி இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி லியாகத் அலி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 11–ந்தேதி (நேற்று) குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்து இருந்தார். இதையொட்டி நேற்று நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை நீதிபதி லியாகத் அலி, வருகிற 19–ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


Next Story