தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்


தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்
x
தினத்தந்தி 12 Dec 2018 3:30 AM IST (Updated: 12 Dec 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் தந்தை மீது சிறுமி போலீசில் புகார் அளித்ததன் எதிரொலியாக அவரது வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறுமி ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்ட தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆம்பூர், 

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இஷானுல்லா குடும்பம் வறுமையில் காணப்பட்டதால் வீட்டில் கழிவறை வசதி கிடையாது. அதனால் குடும்பத்தினர் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.

இதனால் அவதியடைந்த ஹனீபாஜாரா தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டி தரக்கோரி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலும் பள்ளியில் முதலிடம் பெற்று வந்தாள். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கழிவறை கட்டி தருவதாக எழுத்துமூலம் உறுதி பெற்றுத் தரும்படி கோரி தன்னுடைய கைப்பட புகார் மனு எழுதி மனுவுடன் ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையம் சென்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி மனுவை வாங்கி படித்து அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் அவர், சிறுமியின் மன தைரியத்தையும், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவளுக்கு உள்ள உறுதியையும் பார்த்து பாராட்டினார்.

பின்னர் போலீசார், சிறுமியின் பெற்றோர் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியனை அழைத்து பேசினார். துப்புரவு ஆய்வாளர், சிறுமியின் பெற்றோர் மனு அளித்தால் அரசு திட்டத்தின் மூலம் கழிவறை கட்டி தருவதாக கூறினார். அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர்.

இந்த நிலையில் மாணவி ஹனீபாஜாரா வீட்டில் கழிவறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தது குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் ராமன், மாணவியின் செயலை எண்ணி நெகிழ்ச்சியடைந்தார். இதையடுத்து அவர், ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு பேசினார்.

மாணவியின் வீட்டிற்கு உடனடியாக தனிநபர் கழிவறை கட்டி கொடுக்கும்படி கலெக்டர், கமிஷனருக்கு உத்தரவிட்டார். மேலும் திறந்தவெளியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், அதற்காக அவள் மேற்கொண்ட செயலுக்கும் கலெக்டர் ராமன் பாராட்டு தெரிவித்தார். இதேபோன்று பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு வர வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

மாணவி ஹனீபாஜாராவை ஓரிரு நாட்களில் கலெக்டர் நேரில் சந்திந்து பாராட்டு தெரிவிக்க உள்ளதாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹனீபாஜாரா வீட்டில் கழிவறை கட்ட கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் பாஸ்கர் ஆகியோர் நேற்று நேரில் சென்று உடனடியாக கழிவறை கட்டும் பணியை தொடங்க நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து மாணவியின் வீட்டில் கழிவறை கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஹனீபாஜாராவை கவுரவிக்கும் வகையில் ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவராக நியமித்து நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி உத்தரவிட்டார்.

Next Story