கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டுக்காக அய்யப்ப பக்தர் தீக்குளிக்க முயற்சி நாகையில் பரபரப்பு


கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டுக்காக அய்யப்ப பக்தர் தீக்குளிக்க முயற்சி நாகையில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Dec 2018 10:30 PM GMT (Updated: 11 Dec 2018 8:48 PM GMT)

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டுக்காக அய்யப்ப பக்தர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள புத்தர்மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் விஜயகாந்த் (வயது30). இவர் தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த், அலுவலக வாசலில் நின்று கொண்டு உடலில் மண்எண்ணெய் ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகூர் போலீசார், அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரேஷன் கார்டு கிடைக்காததாலும், வீட்டுக்கு மின் இணைப்பு கிடைக்காததாலும் ஏற்பட்ட விரக்தியில் விஜயகாந்த், தீக் குளிக்க முயன்றது தெரிய வந்தது.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட தனக்கு நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் விஜயகாந்த், போலீசாரிடம் கவலையுடன் கூறினார். இதையடுத்து போலீசார் அவரை நாகூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கீழ்வேளூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகம் முன்பும், கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவில் அருகிலும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விஜயகாந்த் தீக்குளிக்க முயற்சி செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அய்யப்ப பக்தர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story