கொடுமுடி அருகே மூதாட்டி கட்டையால் அடித்து படுகொலை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கொடுமுடி அருகே மூதாட்டி கட்டையால் அடித்து படுகொலை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Dec 2018 4:30 AM IST (Updated: 12 Dec 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி அருகே மூதாட்டியை கட்டையால் அடித்து கொன்று நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொடுமுடி,

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் சம்மங்குட்டைபுதூரை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவருடைய மனைவி அருக்காணி (வயது 70). இவர்களுடைய மகள்கள் திலகவதி (49), செல்வி (40). திலகவதி கரூரில் கணவருடன் வசித்து வருகிறார். செல்வி சுமைதாங்கிதூரில் குடும்பத்துடன் உள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு முத்துசாமியும், அருக்காணியும் கரூரில் உள்ள மூத்த மகள் திலகவதியின் வீட்டுக்கு சென்றிருந்தார்கள். பின்னர் கடந்த வாரம் இளைய மகள் வீட்டுக்கு வந்தார்கள். அதன்பின்னர் நேற்று முன்தினம் சம்மங்குட்டைபுதூரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அருக்காணி மட்டும் வந்தார்.

இந்த நிலையில் அருக்காணி நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. அதனால் சந்தேகம் அடைந்து, பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண் அருக்காணியின் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அருக்காணி கட்டிலில் அசைவற்று கிடந்தார். பின் மண்டையில் ரத்தம் வழிந்திருந்தது.

இதனால் பயந்துபோன அவர் அந்த பகுதி மக்களிடம் இதுபற்றி கூறினார். உடனே அவர்கள் இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்து விரைந்து வந்து பார்த்தார்கள்.

அப்போது, யாரோ மர்ம நபர்கள் மண் வெட்டியின் கைப்பிடி கட்டையால், அருக்காணியின் பின்மண்டையில் அடித்து அவரை கொலை செய்தது தெரிந்தது. கையையும் உடைத்திருந்தார்கள். கொலை செய்வதற்கு பயன்படுத்திய மண் வெட்டியின் கைப்பிடி கட்டையும் அங்கேயே கிடந்தது.

வழக்கமாக அருக்காணி இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன்பு கதவை மூடிவிடுவாராம். நேற்று காலை கதவு உடைக்கப்படாமல் திறந்தே கிடந்தது. அதனால் கொலையாளிகள் நேற்று முன்தினம் இரவு அருக்காணி தூங்க போவதற்கு முன்பே நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே தகவல் கிடைத்து வந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இதேபோல் கைரேகை நிபுணர்களும் வந்து பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தார்கள்.

ஈரோட்டில் இருந்து மோப்பநாய் வைதேகி கொண்டுவரப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி வலதுபுறமாக ஓடி ரோட்டில் நின்றது. அதன்பின்னர் நொய்யல் ஆற்றங்கரை வரை ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து போலீசார் அருக்காணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

அருக்காணி கழுத்தில் 7 பவுன் தாலிக்கொடி அணிந்திருந்தார். அவர் அதை அவ்வப்போது கழற்றி வைத்துவிடுவாராம். பிணமாக கிடந்தபோது அவரின் கழுத்தில் நகை இல்லை. அதனால் உள்ளே நுழைந்த கொலையாளிகள் அருக்காணியை கட்டையால் மண்டையில் அடித்து கொன்றுவிட்டு நகையை பறித்து சென்றார்களா? அல்லது நகையை அருக்காணி வழக்கம்போல் கழற்றி வைத்துவிட்டாரா? என்று தெரியவில்லை. நகைக்காக இல்லை என்றால் கொலைக்காண காரணம் என்ன? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே அருக்காணி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்து பதறி அடித்து வந்த கணவர் முத்துசாமி, மகள்கள் திலகவதி, செல்வி ஆகியோர் அவரது உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story