டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2018 11:00 PM GMT (Updated: 11 Dec 2018 9:04 PM GMT)

ராயக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்கள் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த மினி லாரியை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள அயர்னப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது நல்லராலப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் திடீரென நல்லராலப்பள்ளி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நல்லராலப்பள்ளி, கொத்தூர், பாலேபுரம், அளேசீபம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை அந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியில் திரண்டனர். அவர்கள் கடையை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில்களை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று வந்தது.

இதை பார்த்த பொதுமக்கள் அந்த மினி லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, எங்கள் பகுதியில் பள்ளிகள் உள்ளன. மேலும் கோவில்கள் உள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். மது குடிக்கும் நபர்களால் எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் கேலி-கிண்டலுக்கு உள்ளாவார்கள். ஏற்கனவே எங்கள் பகுதியில் மதுக்கடையை திறக்க கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். இருப்பினும் கடந்த நவம்பர் மாதம் அந்த பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் கடை மூடப்பட்டது.

தற்போது, இங்கு டாஸ்மாக் கடையை திறந்து மது விற்பனையை தொடங்கி உள்ளனர். இங்கு டாஸ்மாக் கடையை திறக்க கூடாது. அவ்வாறு திறந்தால் சுற்று வட்டார கிராம மக்களை திரட்டி பெரிய அளவில் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, இங்கு டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக ராயக்கோட்டை அருகே நேற்று பரபரப்பாக காணப்பட்டது.



Next Story