5 மாநில தேர்தல் முடிவுகள்: பா.ஜனதா தலைவர்களின் ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி நாராயணசாமி கருத்து
5 மாநில தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதா கட்சி தலைவர்களின் ஆணவத்துக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளியாக தொடங்கின. இதில் சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னணியில் இருந்தது. இதைத்தொடர்ந்து காங்கிரசார் கட்சி அலுவலகத்தில் இருந்து ராஜா தியேட்டர் சந்திப்புக்கு ஊர்வலமாக சென்றனர்.
அங்கு காங்கிரசின் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
5 மாநில தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த தேர்தல் ராகுல்காந்திக்கு முழு பெருமையை சேர்க்கும். கடந்த 4½ ஆண்டு கால பாரதீய ஜனதா ஆட்சியில் அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
வருடத்துக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம், தொழிற்சாலைகளை கொண்டு வருவோம், விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார்கள். அவர்கள் செய்ய தவறியவற்றை ராகுல்காந்தி தனது பிரசாரத்தின்போது மக்களிடம் எடுத்துக்கூறினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரியினால் விலைவாசி உயர்ந்துள்ளது.
விவசாயிகள் தற்கொலை பெருகி உள்ளது. அவர்களால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. ரபேல் விமான முறைகேட்டில் மோடியின் பெயரும் வருகிறது. தற்போது 3 மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
2019–ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த தேர்தல் ஒரு முன்னோட்டம். ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் மதச்சார்பற்ற அணிகள் ஆட்சி அமைக்கும். நேற்று முன்தினம்கூட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி விவாதித்துள்ளனர்.
பாரதீய ஜனதாவுக்கு இது அஸ்தமன காலம். பாரதீய ஜனதா தலைவர்களின் ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
பொதுப்பணித்துறை அமைச்சரும், புதுவை காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் கூறியதாவது:–
புதுவை வந்திருந்தபோது பிரதமர் நரேந்திரமோடி தற்போது நடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்குப்பின் புதுச்சேரியில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் என்று பிரதமர் பேசினார். அவரது ஆணவ பேச்சுக்கு அளித்த பதில்தான் இந்த தேர்தல் முடிவுகள். காங்கிரசுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி எதிர்கால வெற்றிக்கு முன்னோட்டமாக இருக்கும். இனி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.