ஆடம்பர செலவுகளை தவிர்த்து கல்விக்கு உதவ வேண்டும்; தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு, கிரண்பெடி அறிவுரை
தொண்டு நிறுவனங்கள் ஆடம்பர செலவுகளை தவிர்த்து கல்விக்கு உதவவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தினார்.
திருக்கனூர்,
கவர்னர் கிரண்பெடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்ணாடிப்பட்டு கிராமத்தில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள், பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கவர்னரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்ய தனியார் தொண்டு நிறுவனத்தை கவர்னர் கிரண்பெடி ஏற்பாடு செய்தார். இதையடுத்து பள்ளியில் சுற்றுச்சுவர், சிமெண்டு தரை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுவை தனியார் ஓட்டலில் நடக்கும் சாதனையாளர் விருது வழங்கும் விழாவுக்கு வருமாறு கவர்னர் கிரண்பெடிக்கு தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். ஓட்டலில் விழா நடத்த அதிகளவில் பணம் செலவு செய்வீர்கள். எனவே மண்ணாடிப்பட்டு அரசு பள்ளியில் நிகழ்ச்சியை நடத்தும்படியும், ஓட்டலுக்கு செலவு செய்யும் பணத்தில் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் சாதனையாளர் விருது வழங்கும் விழா மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு, விருது வழங்கினார். இதில் டி.பி.ஆர். செல்வம் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின்போது தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளிக்கு கம்ப்யூட்டர் மற்றும் எழுதுபொருள், குடைகளை கவர்னர் கிரண்பெடி வழங்கினார். பாகூரை சேர்ந்த பள்ளி மாணவருக்கு டேப்லெட் கம்ப்யூட்டரும் வழங்கப்பட்டது. விழாவில் கவர்னர் பேசிய கவர்னர் கிரண்பெடி, முன்னுதாரணமாக இந்த விழா நடத்தப்படுகிறது. தனியார் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் நடக்கும் விழாவில் ஆடம்பர செலவுகளை குறைத்து அரசு பள்ளிகளின் கல்விக்கு உதவவேண்டும் என்றார்.
விழாவில் பள்ளிக்கு நன்கொடையாக ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை தொண்டு நிறுவன நிர்வாகி ஒருவர் கவர்னரிடம் வழங்கினார். ஆனால் அதை அவர் வாங்க மறுத்து, அந்த பணத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு சாதனங்கள் வாங்கிக்கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.
விழாவில் கலந்துகொண்ட கிராம மக்கள், ரேஷன் கடைகளில் நிறுத்தப்பட்ட அரிசியை மீண்டும் வழங்கவேண்டும் என்று கவர்னரிடம் கூறினர். இதற்கு அவர், அரிசி தரமாக இல்லாததால்தான் பணமாக வழங்குகிறோம். அந்த பணத்தில் நல்ல அரிசியை வாங்கி சாப்பிடுமாறு கூறினார். இதையடுத்து கவர்னர் கிரண்பெடி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.