நடுவட்டத்தில்: ரூ.3 கோடியில் பஸ் நிலைய கட்டுமான பணிகள் தொடக்கம் - பழைய கடைகள் அகற்றப்பட்டன
நடுவட்டத்தில் ரூ.3 கோடியில் பஸ் நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக பழைய கடைகள் அகற்றப்பட்டன.
கூடலூர்,
கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 17 கி.மீட்டர் தொலைவில் நடுவட்டம் பேரூராட்சி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். மேலும் பைக்காரா படகு குழாம், பைக்காரா அணை மற்றும் அருவி, சீன கைதிகள் அடைக்கப்பட்ட ஆங்கிலேயர் கால சிறைச்சாலை என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதுதவிர தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டம் உள்பட தனியார் எஸ்டேட்டுகள் உள்ளது.
இந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடலூர், நடுவட்டம் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். இதுதவிர கூடலூரில் இருந்து நடுவட்டம் வழியாக ஊட்டி, கோவை, ஈரோடு, சேலம், சென்னை, கன்னியாகுமரி உள்பட பல ஊர்களுக்கு அரசு பஸ்கள் ஏராளமாக இயக்கப்படுகிறது.
கூடலூரில் இருந்து நடுவட்டம் வரை செங்குத்தான மலைப்பாதை என்பதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகிறது. இதனால் நடுவட்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படுகிறது. ஆனால் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி கிடையாது. மேலும் பஸ்நிலையத்தின் மேற்கூரைகள் மிகவும் பழுதடைந்து மழைக்காலத்தில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதையொட்டி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இதனால் பணிகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
உடனடியாக நேற்று முன்தினம் பேரூராட்சி நிர்வாகம் வசம் கடைகள் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராகீம் தலைமையிலான அலுவலர்கள் நேற்று காலை 9.30 மணிக்கு நடுவட்டத்தில் பஸ் நிலையம் கட்டும் பணியை தொடங்கினர். முதற்கட்டமாக பொக்லைன் எந்திரம் மூலம் பழைய கடைகள் மற்றும் பஸ் நிலைய கட்டிடங்கள், மேற்கூரைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராகீம் கூறியதாவது:-
நடுவட்டத்தில் ரூ.3 கோடி செலவில் பஸ் நிலையம் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பழைய கட்டிடங்கள், கடைகள் அகற்றப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தின் உள்ளே உணவகம் உள்பட 10 கடைகள் கட்டப்படுகிறது. மேலும் பஸ்கள் அதிகளவு நிறுத்தவும் போதிய இடம் ஒதுக்கப்படும். இதுதவிர பல்வேறு அம்சங்களுடன் கூடிய வசதிகளும் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே நடுவட்டத்தில் பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story