அ.ம.மு.க.வை சேர்ந்த யாரும் தி.மு.க.வில் சேர மாட்டார்கள் - முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பேட்டி


அ.ம.மு.க.வை சேர்ந்த யாரும் தி.மு.க.வில் சேர மாட்டார்கள் - முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2018 5:00 AM IST (Updated: 12 Dec 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

அ.ம.மு.க.வை சேர்ந்த யாரும் தி.மு.க.வில் சேர மாட்டார்கள், என்று முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.

தர்மபுரி,

அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தர்மபுரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளில் வாக்குச்சாவடி குழு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு தொகுதியில் 70 ஆயிரம் பேரை புதிய உறுப்பினர்களாக அ.ம.மு.க.வில் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சியின் தீவிர பணியில் ஈடுபட்டுள்ள என்மீது களங்கம் கற்பிக்கும் வகையில், நான் தி.மு.க.வில் சேரப்போவதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

நான் தி.மு.க.வில் சேரப்போவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. அப்படி ஒரு எண்ணம் எனக்கு கிடையாது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அதன்பின் எடப்பாடி பழனிசாமியை சசிகலா தான் முதல்-அமைச்சர் ஆக்கினார். ஆனால் தனது தலைமையிலான அரசை எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு கட்சி பதவி மற்றும் துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கிய எடப்பாடி பழனிசாமி, சசிகலாவிற்கு துரோகம் இழைத்து உள்ளார்.

அ.ம.மு.க. தொடங்கப்பட்டபின் என்னுடைய சிறப்பான செயல்பாட்டை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் உளவுத்துறையின் உதவியுடன் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இதையாரும் நம்பவேண்டாம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அ.ம.மு.க.வில்தான் இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு துணிச்சலும், ஆளுமையும் கொண்ட தலைமையாக டி.டி.வி.தினகரன் உருவெடுத்து உள்ளார். அ.ம.மு.க.வை சேர்ந்த யாரும் தி.மு.க.வில் சேரமாட்டார்கள். தமிழக ஆட்சியாளர்களுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை. அவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றி கொள்வதிலேயே குறியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் டி.கே.ராஜேந்திரன், நகர செயலாளர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.



Next Story