குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்ககோரி மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்ககோரி மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Dec 2018 4:15 AM IST (Updated: 12 Dec 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்ககோரி மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

மணப்பாறை,

மணப்பாறை நகரின் கடைசி பகுதியான கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பட்டி பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து உள்ளதால் அதில் தண்ணீர் ஏற்றும் அளவு குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், நேற்று காலை மணப்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அவர்களிடம், வட்டார வளர்ச்சி அதிகாரி மருததுரை பேச்சுவார்த்தை நடத்தினார். உங்கள் கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story