பழனியில் கூட்டுறவு சங்க தேர்தல்: வேட்பாளர் பட்டியல் கிழிப்பு; அ.ம.மு.க.வினர் சாலை மறியல்
பழனியில் கூட்டுறவு சங்க தேர்தலையொட்டி ஒட்டப்பட்ட வேட்பாளர் பட்டியலை அடையாளம் தெரியாத சிலர் கிழித்து எறிந்தனர். இதை கண்டித்து அ.ம.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர்.
பழனி,
பழனியில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்துள்ளது. இதற்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு ஏற்கனவே 6.10.2018 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல்கள் கிழிக்கப்பட்டு பிரச்சினை ஏற்பட்டதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 10-ந்தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களின் இறுதிபட்டியல் ஒட்டப்பட்டது. இந்நிலையில் அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர் வேட்பாளர் பட்டியலை கிழித்து எறிந்தனர்.
வேட்பாளர் பட்டியல் கிழிக்கப்பட்டதை அறிந்ததும் அ.ம.மு.க. பழனி நகர செயலாளர் கணேசன் தலைமையில் அ.ம.மு.க.வினர் பழனியில் உள்ள திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வேட்பாளர் பட்டியலை கிழித்த அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும், புதிய வேட்பாளர் பட்டியலை ஒட்டவேண்டும் என கோஷமிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பழனி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அ.ம.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேட்பாளர் பட்டியலை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் உடனடியாக புதிய வேட்பாளர் பட்டியல் ஒட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அ.ம.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story