மனைப்பட்டா வழங்க கோரி: சப்-கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை - விருத்தாசலத்தில் பரபரப்பு
மனைப்பட்டா வழங்க கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள எஸ்.நரையூர் கிராம மக்கள் நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்கள், சப்-கலெக்டர் பிரசாந்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதற்காக எங்கள் பகுதியில் அரசு இடம் ஒதுக்கி உள்ளது. அந்த இடத்தை சில தனிநபர்கள் அதிகாரிகளின் அனுமதியின்றி தங்களது உறவினர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு இலவச மனைப்பட்டா பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியற்றவர்களுக்கு மனைப்பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். மேலும் உரிய பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரசாந்த், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Related Tags :
Next Story