கொங்கணாபுரத்தில்: பள்ளிக்கு செல்லும் வழியில் ‘ஈவ் டீசிங்’ செய்கிறார்கள் - கலெக்டரிடம், பிளஸ்-2 மாணவி கண்ணீர் மல்க புகார்


கொங்கணாபுரத்தில்: பள்ளிக்கு செல்லும் வழியில் ‘ஈவ் டீசிங்’ செய்கிறார்கள் - கலெக்டரிடம், பிளஸ்-2 மாணவி கண்ணீர் மல்க புகார்
x
தினத்தந்தி 12 Dec 2018 3:15 AM IST (Updated: 12 Dec 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

கொங்கணாபுரத்தில் பள்ளிக்கு செல்லும் வழியில் ‘ஈவ் டீசிங்’ செய்கிறார்கள் என்று பிளஸ்-2 மாணவி ஒருவர், கலெக்டர் ரோகிணியிடம் கண்ணீர் மல்க புகார் கூறினார். இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தர விட்டார்.

எடப்பாடி,


கொங்கணாபுரம் ஊராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த ஆய்வு கூட்டம் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் சரியான முறையில் குளோரினேசன் செய்து வழங்கப்படுவது குறித்தும், கிராம பகுதிகளில் சுற்று புறங்களை தூய்மை பணியாளர்கள் சுத்தபடுத்துகிறார்களா? என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அலுவலக வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று கொண்டார்.

தொடர்ந்து கொங்கணாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ராஜவீதியில் சாக்கடை கால்வாய் வசதி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதனிடையே சடையம்பாளையம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கோமதி கோரிக்கை மனுவுடன் கண்ணீர் மல்க நின்றார். சீருடையில் வந்திருந்த அந்த மாணவியிடம் என்ன பிரச்சினை? என்று கலெக்டர் ரோகிணி விசாரித்தார்.

அப்போது அந்த மாணவி கலெக்டரிடம், தனக்கு ‘ஈவ் டீசிங்’ தொல்லை ஏற்பட்டு வருவது குறித்து தெரிவித்தார். அந்த மாணவி கூறியதாவது:-

நான் கொங்கணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறேன். நான் பள்ளிக்கு செல்லும் வழியில், ஒரு சிலர் கேலி கிண்டல் செய்து ‘ஈவ் டீசிங்’ செய்கிறார்கள். போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு செல்லாமல் தங்களிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்துள்ளேன்.

இவ்வாறு கண்ணீர் மல்க அந்த மாணவி கூறினார். அதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அந்த பள்ளி மாணவியின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறினார். மேலும் பள்ளியில் தேர்வு நடைபெறும் நேரத்தில் இவ்வாறு வரக்கூடாது என்றும் அந்த மாணவிக்கு அறிவுரை கூறினார். பின்னர் அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் உடனடியாக மாணவியின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார்.

இதையடுத்து கொங்கணாபுரம் மேம்படுத்தப்பட்ட ஆரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற கலெக்டர் அங்கு கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார். பின்னர் வெள்ளாளபுரம், சமுத்திரம், கோணசமுத்திரம், எருமைப்பட்டி ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, உதவி பொறியாளர் அருள், ஆணையாளர்கள் கண்ணன், சொக்கலிங்கம், அட்மா திட்டகுழுதலைவர் கரட்டூர் மணி, டாக்டர் மகேந்தர், பேரூராட்சி செயல் அலுவலர் குலோத்துங்கன், பேரூராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story