‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்கு நாளை அடிக்கல் நாட்டு விழா - முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு


‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்கு நாளை அடிக்கல் நாட்டு விழா - முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Dec 2018 3:30 AM IST (Updated: 12 Dec 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ரோகிணி நேற்று ஆய்வு செய்தார்.

சேலம், 

சேலம் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்தின் மூலம் சேலம் பழைய பஸ் நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு முதல் முறையாக ரூ.92.13 கோடி செலவில் ஈரடுக்கு பஸ்நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்த விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் குறித்து நேற்று சேலம் பழைய பஸ் நிலையத்தில் கலெக்டர் ரோகிணி ஆய்வு நடத்தினார். பின்னர் ஈரடுக்கு பஸ் நிலையத்துக்கான வரைபடத்தை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், போலீஸ் கமிஷனர் சங்கர் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையடுத்து கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறும் போது, ‘சேலம் மாநகராட்சியில் ரூ.200 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 13-ந் தேதி (நாளை) அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்‘ என்றார்.

மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறும் போது, ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா முடிந்தவுடன் பணிகள் தொடங்கி விடும். அதைத்தொடர்ந்து 2 மாதத்தில் போஸ் மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படும். தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்‘ என்றார்.

Next Story