இந்தக் காரின் விலை ரூ.6.95 கோடி
உயர் ரக பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம்தான் கல்லினன்.
இந்திய சந்தைக்கென அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தக் காரின் விலை ரூ.6.95 கோடி. பிரீமியம் மாடல் உற்பத்திக்கென உருவாக்கப்பட்ட தளத்தில் இந்தக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பிரிவில்தான் பேன்டம் காரை இந்நிறுவனம் தயாரித்தது.
பிரமாண்டமான தோற்றத்துடன் நவீன வசதிகளை உள்ளடக்கியதாக இது வந்துள்ளது. 5,341 மி.மீ. நீளம், 2,164 மி.மீ. அகலம் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. காருக்கு கம்பீரமான தோற்றத்தை அளிப்பதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை அதன் டயர்கள்தான். இதில் 3,295 மி.மீ. டயர்களும் உள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கென பிரத்யேக கிரில் இதன் தோற்றப் பொலிவை மேலும் மெருகேற்றியுள்ளது. செவ்வக வடிவிலான எல்.இ.டி. முகப்பு விளக்குகள் இதற்கு வித்தியாசமான தோற்றத்தை அளிக்கின்றன. எதிரெதிர் திசையில் திறக்கும் வகையில் இந்த காரின் கதவுகள் உள்ளது விசேஷமான வடிவமைப்பாகும். 22 அங்குல அலாய் சக்கரம், மேற்கூரை பகுதியில் அமைக்கப்பட்ட ஸ்பாயிலர், செங்குத்தான பின்புற விளக்கு, இரட்டை சைலன்ஸர் ஆகியன இக்காரின் சிறப்பம்சங்களாகும்.
உள்புறத்தில், பேன்டம் காரில் உள்ளதைப் போன்ற சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மிருதுவான தோல், உயரிய தோற்றம் அளிக்கும் மர வேலைப்பாடு உள்ளிட்டவை இதன் ஆடம்பரத்தை வெளிப்படுத்துகிறது. அனைத்து செயல்பாடுகளும் மின்னணு கட்டுப்பாடு கொண்டவை. தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், அனலாக் கடிகாரம் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும். இந்தியாவுக்கென பிரத்யேகமாக பின் இருக்கை பயணிகளுக்கென 12 அங்குல திரையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இது 571 ஹெச்.பி. திறன் மற்றும் 850 நியூட்டன் மீட்டர் இழுவிசையை வெளிப்படுத்தக்கூடியது. இதில் 8 கியர்களைக்கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. நான்கு சக்கர சுழற்சி இருப்பதால் சாகச பயணத்திற்கும், நீண்ட தூர பயணத்திற்கும் ஏற்றது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான வண்ணத்தை தேர்வு செய்யலாம். உதிரி பாகங்கள் எவை வேண்டுமென்று தெரிவிக்கலாம். உதிரி பாக இணைப்புகள் மட்டுமே ரூ.1 கோடி வரை செலவு ஆகும். கோடீஸ்வரர்களுக்கு ஏற்ற பிரமாண்டமான கார் இது.
Related Tags :
Next Story