தூத்துக்குடியில் கடல்பாசி அறுவடை தொடங்கியது மீனவர்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடியில் நேற்று கடல்பாசி அறுவடை தொடங்கியது. இது மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நேற்று கடல்பாசி அறுவடை தொடங்கியது. இது மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடல்பாசி
தூத்துக்குடி சுனாமி நகர் கடல் பகுதியில் மீனவர்கள் கடல்பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கடல் பாசிகளை அறுவடை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி மனோஜ்குமார் தலைமை தாங்கினார். முதன்மை விஞ்ஞானி ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். மத்திய கடல் பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணைய உதவி இயக்குனர் அஞ்சு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கடல்பாசி அறுவடை பணிகளை தொடங்கி வைத்தார்.
மாற்றுத் தொழில்
நிகழ்ச்சியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி மனோஜ்குமார் பேசியதாவது:-பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க பருவநிலைக்கு ஏற்ற வேளாண்மை என்ற திட்டத்தின் கீழ் கடல்பாசி வளர்ப்பு தொழில் செயல்படுத்தப்படுகிறது. இது மீனவர்களுக்கு வருமானம் தரக்கூடிய மாற்றுத் தொழிலாக விளங்குகிறது. இது தவிர கூண்டுகளில் மீன்வளர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப உதவி, ஆலோசனைகளையும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் மக்களுக்கு வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இது குறித்து மீனவர் ஒருவர் கூறும் போது, “100 மிதவை கயிறுகளை கொண்ட ஒரு அமைப்பில் 35 நாட்களில் சுமார் 10 டன் அளவுக்கு கடல்பாசி வளர்ச்சியடைகிறது. ஒரு கிலோ கடல்பாசி உலர வைக்காத நிலையில் ரூ.4-க்கும், உலர வைத்தால் ரூ.40-க்கும் விற்பனையாகிறது. இதன் மூலும் நல்ல வருமானம் கிடைக்கிறது” என்று கூறினார். கடல்பாசி அறுவடை தொடங்கி இருப்பது மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிகழ்ச்சியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர். விஞ்ஞானி ரஞ்சித் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story