நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மூடல் தற்காலிக பஸ் நிறுத்தங்களால் போக்குவரத்து நெரிசல்


நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மூடல் தற்காலிக பஸ் நிறுத்தங்களால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:00 AM IST (Updated: 12 Dec 2018 5:29 PM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.78½ கோடியில் புதுப்பிப்பு பணி தொடங்கி உள்ளதால் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மூடப்பட்டது.

நெல்லை, 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.78½ கோடியில் புதுப்பிப்பு பணி தொடங்கி உள்ளதால் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மூடப்பட்டது. இதையொட்டி அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிறுத்தங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் தவிப்புக்கு ஆளானார்கள்.

ரூ.78½ கோடியில் புதுப்பிப்பு

இந்தியா முழுவதும் ‘ஸ்மார்ட்‘ சிட்டி திட்டத்தின் கீழ் பல முக்கிய நகரங்கள் நவீனப்படுத்தபட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் நெல்லை மாநகராட்சியும் சேர்க்கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு கட்டமாக நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.78 கோடியே 50 லட்சத்தில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த புதிய பஸ் நிலையத்தில் கீழ்பகுதியில் (அண்டர் கிரவுண்ட்) கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளன. தரைதளத்தில் பஸ் நிறுத்தும் வசதியும், முதல், இரண்டாவது தளத்தில் கடைகள், தங்கும் விடுதிகள், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட உள்ளன.

தற்காலிக பஸ் நிலையங்கள்

இதையொட்டி நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்களை நிறுத்துவதற்காக நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் பகுதி, நயினார்குளம் கரை பகுதி, அருணகிரி தியேட்டர் அருகில், பாளையங்கோட்டை பஸ் நிலையம், சித்த மருத்துவக்கல்லூரி அருகே உள்ள நேருஜி கலையரங்கம் ஆகிய 5 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி நேற்று முன்தினம் இரவே தொடங்கியது. இதற்காக பஸ் நிலையத்தை சுற்றி உள்ள சுவர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன. பின்னர் இந்த இடிபாடுகள் பஸ்கள் உள்ளே வராதவகையில் நுழைவு வாயில்கள் முன்பு கொட்டப்பட்டு நேற்று அதிகாலை நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மூடப்பட்டது. மேலும் பஸ்நிலையத்தின் உள்பகுதிகளிலும் குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. பிளாட்பாரங்களில் உள்ள மேற்கூரைகள் அகற்றப்பட்டன.

வியாபாரிகள் எதிர்ப்பு

இதனால் நேற்று காலை முதல் பஸ் நிலையத்திற்குள் எந்த பஸ்களும் வரவில்லை. ஆனால், உள்ளே இருக்கும் கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. கடைகளை காலி செய்யாவிட்டால் மின்சாரமும், குடிநீரும் நிறுத்தப்படும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இருந்தாலும் பஸ்கள் உள்ளே வராததால் பயணிகளும் பஸ் நிலையத்திற்குள் வரவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகளில் வியாபாரம் சரிவர நடைபெறவில்லை.

தற்காலிக பஸ் நிறுத்தம்

நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், முக்கூடல், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்கின்ற பஸ்கள் அனைத்தும் சந்திப்பு பஸ் நிலையத்திற்கு வந்துதான் செல்லும். தற்போது பஸ் நிலையம் மூடப்பட்டதால் அந்த பஸ்களில் பயணிகள் ஏறி இறங்குவதற்காக தச்சநல்லூர் மண்டல அலுவலகத்திற்கு செல்கின்ற பாதை அருகில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு நேற்று தென்காசி, செங்கோட்டை பகுதியில் இருந்து வந்த பஸ்கள் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு சென்றன. இதனால் த.மு.ரோடு, நெல்லை சந்திப்பு மதுரை ரோடு பகுதியில் மக்கள் கூட்டமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தாழையூத்து பகுதிகளுக்கு செல்கின்ற பஸ்கள் பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியான மதுரை ரோடு பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றன.

பயணிகள் தவிப்பு

பாளையங்கோட்டை, டவுன், சுத்தமல்லி பகுதிக்கு செல்கின்ற டவுன் பஸ்கள் பஸ் நிலையத்தின் கீழ் பகுதியில் அதாவது சாந்திநகர் பஸ்கள், ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்ட இடத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் சென்றன. மேலும் இந்த இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கான கொட்டகை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் இடம் தேர்வு செய்து அங்கு குழி தோண்டி உள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி வெளியூர் பஸ்களும், உள்ளூர் டவுன் பஸ்களும் ஒரே இடத்தில் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதால் நெல்லை சந்திப்பு பகுதியில் நேற்று காலை 8 மணி முதல் தொடர்ந்து கூட்ட நெரிசலும், போக்குவரத்து நெருக்கடியும் இருந்து கொண்டே இருந்தது. எந்த ஊர் பஸ் எங்கு இருந்து இயக்கப்படுகிறது என்று தெரியாததால் பயணிகள் அங்கும், இங்கும் ஓடி தவித்தார்கள். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

போக்குவரத்து நெருக்கடி

போக்குவரத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நின்று போக்குவரத்தை சீர்செய்தனர். இருந்தபோதும் கிழக்கு நோக்கி செல்லும் பஸ்கள், வாகனங்கள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து வண்ணார்பேட்டை ரவுண்டா வரையும், மேற்கே டவுன் ஆர்ச் வரையும் அணிவகுத்து நின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் பரிதவிப்புக்குள்ளானார்கள்.

நெல்லை மாநகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5 தற்காலிக பஸ் நிலையங்களும் நேற்று செயல்படவில்லை. இன்று (வியாழக்கிழமை) முதல் அவற்றில் பஸ்கள் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தற்காலிக பஸ்நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டால் நெல்லை சந்திப்பு பஸ்நிலைய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

துணை போலீஸ் கமி‌ஷனர்

இதுகுறித்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் சுகுணாசிங் கூறியதாவது;–

நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் புதுப்பிக்கப்படுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது சோதனை முறையில் இயக்கப்படுகிறது. இதில் எந்தவித பிரச்சினையும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படவில்லை என்றால் இந்த மாற்றம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 5 தற்காலிக பஸ்நிலையங்களில் இருந்து விரைவில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story