கலசபாக்கம் அருகே பழுதான மின்மாற்றியை சரி செய்யாதால் இருளில் மூழ்கிய கிராமம் அதிகாரிகளின் மெத்தனத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
பழுதான மின்மாற்றியை சரி செய்யாததால் கலசபாக்கம் அருகே மருத்துவாம்பாடி கிராமம் இருளில் மூழ்கியது. இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் மெத்தனத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலசபாக்கம்,
கலசபாக்கம் அருகில் உள்ள மருத்துவாம்பாடி கிராமத்தில் இயங்கி வந்த 850 கிலோ வாட் மின்மாற்றியின் மூலம் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் அந்த பகுதியில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின்சாரம் கிடைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த மின்மாற்றி பழுந்தடைந்தது. இதனை சரி செய்து தருமாறு அந்த பகுதி பொதுமக்கள் நாயுடு மங்கலம் துணை மின்சார நிலையத்திற்கு புகார் அளித்தனர்.
இது குறித்து திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதனை சரி செய்ய எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதனால் கிராம மக்கள் தங்களுடைய சொந்த பணத்தை திரட்டி மின்மாற்றியை கழற்றி அதனை சரி செய்து தரும்படி திருவண்ணாமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் 2 வாரமாகியும் அந்த மின்மாற்றியை மின்வாரிய அதிகாரிகள் சரி செய்யாமலும், வேறு மின்மாற்றியை மாற்றாமலும் உள்ளனர்.
இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மின்சாரமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். கிராமமும் இருளில் மூழ்கியுள்ளது. அரையாண்டு தேர்வு நடக்கும் நேரத்தில் மின்சாரம் இல்லாததால் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு சிரமப்படுகின்றனர். ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்ற முடியாததால் ஆடு, மாடுகளும் தண்ணீரின்றி தவிக்கின்றன. மேல்நிலை தொட்டியிலும் குடிநீர் ஏற்ற முடியாததால் பொதுமக்களுக்கும் குடிநீர் கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மருத்துவாம்பாடியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழுதான மின்மாற்றியை சரி செய்து தங்களது பகுதியில் மின்சாரம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் இந்த பிரச்சினையில் தாமதம் செய்தால் திருவண்ணாமலைக்கு சென்று கலெக்டர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.